திசைகாட்டி

மனசு போல வாழ்க்கை 27: மனித வாழ்வு ஓர் சின்னஞ்சிறிய துகள்!

செய்திப்பிரிவு

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

உண்மையைத் தேடிச் செல்லும்போது நம் இருப்பு பற்றிய கேள்விகளும் கடவுள் இருப்பு பற்றிய சந்தேகங்களும் இயல்பாகத் தோன்றும். கடவுள் இருக்கிறாரா, அப்படி இருந்தால் எங்கு இருக்கிறார் என்று யோசிக்காத மனிதனே இல்லை என்று சொல்லலாம்.

ஒரு மாபெரும் பிரபஞ்ச சக்திக்கும் அதன் செய்கைகளுக்கும் நம் நம்பிக்கைககளுக்கு ஏற்ப பெயர்கள் சூட்டி அதைப் பின்பற்றுகிறோம். கடவுள் மறுப்பு கொள்வோரும் கடவுள் தன்மைகளை மனிதனே கொண்டுள்ளதாகவும் கடவுள் என்று வெளியில் இல்லை என்றும் முடிவு கொள்கின்றனர்.

ஒற்றுமையும் வேற்றுமையும்

நம் தற்போதைய அன்புக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் பன்மடங்கு அதிகமான ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது என்பதில் யாவரும் ஒன்றுபடுகிறோம். அது எது என்பதில்தான் வேறுபடுகிறோம். கடவுளை மதத்தில் பூட்டி வைக்கும்போது, “இவரைத் தவிர யாரும் கடவுள் கிடையாது!” என்று முஷ்டியை மடக்குகையில் நம் இறை வழியை விட்டு இயல்பான மனித / மிருக நிலைக்குத் திரும்புகிறோம். பிற நம்பிக்கைகளை அச்சுறுத்தல்களாகப் பார்க்கிறோம். அடுத்த மதத்தில் உள்ள வேறுபாடுகளை ஒரு கற்றல் அனுபவமாகக் காணத் தவறுகிறோம். ஆனால், ஒவ்வொரு மதமும் பிற மதத் தாக்கத்தால் பல மாற்றங்களை உள் வாங்கியிருப்பதை வரலாற்றைப் படித்தால் புரிந்துகொள்ளலலாம்.

கடவுளைப் பற்றிய புரிதல் வாழ்தலைச் செழுமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடவுளை ஆராய்தல், வாழ்க்கையை ஆராய்தல், நம் இருத்தலை ஆராய்தல். நம்பிக்கை கொள்வதும் கொள்ளாதிருத்தலும் அவரவர் விருப்பம். ஆனால், ஆராயாமல், உள் நோக்கிப் போகாமல், கருத்தில் கவனம் கொள்ளாமல் வைக்கும் நம்பிக்கையோ அல்லது அவ நம்பிக்கையோ செழுமை சேர்க்காது. மாறாக, அது தனக்கோ பிறர்க்கோ கேட்டைத்தான் சேர்க்கும்.

அற ஒழுக்கத்தையும் வாழும் முறையையும் கற்றல் அவசியம். இறை நம்பிக்கையும் பல சடங்குகள் மூலமாக வாழ்வின் தத்துவத்தை நமக்குப் போதிக்கின்றன. ஆனால், அதன் சாரத்தை எடுத்துக்கொள்வதும் சடங்கை மட்டும் செய்வதும் அவரவர் மன வளர்ச்சியைப் பொறுத்தது. அதே போல் பகுத்தறிவு பல அற்புதக் கேள்விகளையும் மனித நேயத்தையும் முன் வைக்கிறது. இந்த தத்துவ விசாரணையற்ற கடவுள் மறுப்பு பல அடிப்படை அறங்களைக் கற்கத் தவறிவிடுகிறது.

அறத்தை வலியுறுத்தும் நம்பிக்கை

“எனக்கு எது மேலும் நம்பிக்கை கிடையாது!” என்று எவரேனும் சொல்லும்போது எனக்குக் கவலையாக இருக்கும். கடவுள் மேல் இல்லாவிட்டாலும் தன் மேல் இருக்கலாம். மனித நேயமோ, இயற்கையோ, கலை இலக்கியமோ, அறிவியலோ அல்லது குடும்பத்தில் எவரோ ஒருவர் மீதோ...

ஏதோ அல்லது எதன் மீதோ நம்பிக்கை கொள்வது வாழ்வின் மீது ஒரு பிடிமானம் ஏற்படச்செய்யும். தன் வழிமுறைகள் பற்றிச் சிந்திக்க வைக்கும். தன் செய்கையால் நிகழ்பவைகளுக்குப் பொறுப்பு எடுத்துக் கொள்ளச் செய்யும். இது தவறும்போது தனி நபர் ஒழுக்கமும் ஆரோக்கியமும் கெடுகிறது. சமூகச் சீர்கேடும் தொடங்குகிறது.

“தப்பு செஞ்சா பகவான் தண்டிப்பார்” என்ற ஆத்திகர் நம்பிக்கையும் அற வழிப்படுத்தும். “நாம் செய்வது தான் நமக்கு நிகழும். இது தான் வாழ்க்கைத் தத்துவம்” என்ற வாழ்வியல் அலசலும் அற வழிப்படுத்தும்.

அனுபவமே அறிவு

கண்ணதாசன் கவிதை ஒன்றில் அவர் கடவுளைப் பார்த்துக் கேட்பார், “எல்லாவற்றையும் அனுபவித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீ எதற்கு?” “அந்த அனுபவம்தான் நான்!” என்று முடிப்பார் கடவுள். அனுபவ அறிவை ஆண்டவன் எனக் கொள்வதும் ஆண்டவனை உலகின் மொத்த அனுபவ அறிவு என வணங்குவதும் அவரவர் மன நிலையைப் பொறுத்த விஷயம். அன்பே சிவமா, சிவமே அன்பா என்பது தனி நபர் நம்பிக்கை. ஆனால், வாழ்வில் ஆதார விழுமியங்களை நாம் கற்கத் தவறும்போது ஒரு சீர்கெட்ட சமூகத்தைக் கட்டமைக்கிறோம் என்பது உறுதி.

மனித வாழ்வு தானாகத் தனியாக இயங்கும் தனி வாழ்வு அல்ல. அது மக்கள் கூட்ட நிகழ்வின் ஒரு சின்னஞ்சிறிய துகள். புற உலகை முழுவதுமாகத் துண்டித்துக்கொண்டு ஒரு மனிதன் இயல்பான வாழ்க்கை வாழ முடியாது. குடும்பம், சுற்றம், கிராமம், மாநிலம், தேசம், உலகம் என எல்லாத் தரப்பு மக்களும் நம் வாழ்வை ஒவ்வொரு நொடியிலும் மாற்றி அமைத்து வருகிறார்கள். உங்கள் வாழ்வும் மிக மிகச் சொற்ப அளவில் உலகின் போக்கையே பாதித்துக்கொண்டு தான் போகிறது. தனி மனிதன் தான் வாழும் உலகுக்குச் செய்யும் பங்குதான் இந்தப் பூவுலகின் விதியை நிர்ணயிக்கிறது.

மனிதன் தெய்வமாகலாம்

பிறருக்கு சேவை செய்கையில் உங்கள் மூளையின் விசேஷ சுரப்பிகள் மகிழ்ச்சி எனும் உணர்வைத் தூண்டுகிறது என்று மருத்துவம் சொல்கிறது. அடுத்தவருக்கு உதவி செய்கையில் நம் தனி நபர் துக்கம் குறைகிறது என்று உளவியல் சொல்கிறது. புறத்தார்க்கு நன்மை செய்தல் புண்ணியம் என்று மதம் சொல்கிறது. நம் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் தான் பேரிடர் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் என்று சூழலியல் சொல்கிறது. எப்படிப் பார்த்தாலும் பிறருக்கு உதவுவதுதான் நாம் செழுமையாக வாழச் சிறந்த வழி எனத் தெரிகிறது. பொது நலம் என்பதுதான் நிஜமான சுய நலம்.

உதவி செய்ய மனம் ஒன்று மட்டும் போதும். மற்ற அனைத்தையும் அது தேடித் தந்துவிடும். சேவை செய்ய வசதி வேண்டாம். செய்ய வேண்டும் என்ற எண்ணம் போதும். எங்கோ சென்று 80 G க்கு ஆசைப்பட்டு அளந்து கொடுப்பது தான் தானம் என்பதில்லை.

பார்வையற்றவருக்குப் படித்துக் காண்பித்தல், போக்குவரத்து நெரிசலைத் தெருவில் இறங்கிச் சரிசெய்தல், பொது இடத்தைச் சுத்தப்படுத்துதல், தகவல் தெரியாதவர்களுக்குத் தகவல் அளித்தல், விபத்து நடந்தால் இறங்கி உதவுவது, நம் வீட்டில் பணி புரியும் படிக்காத எளியோர்களுக்குப் பாடம் சொல்லித் தருதல், நலிந்தோர் குறைகளை ஆட்சியாளர்களுக்கு எழுதுதல், மனசு விட்டுப் பேசுகையில் உளமார கேட்டுக்கொண்டு ஆற்றுப்படுத்துதல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். பிறர் துயரைப் போக்கும் அனைத்தும் சேவை தான்.

கொடுக்கும்போது மனித மனம் மேன்மையடைகிறது. மனிதன் தெய்வமாகிறான்!

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

SCROLL FOR NEXT