திசைகாட்டி

சேதி தெரியுமா? - 129-ம் இடத்தில் இந்தியா

செய்திப்பிரிவு

தொகுப்பு: கனி

டிச. 9: 2019 மனித வளர்ச்சிப் பட்டியலை ஐ.நா. வளர்ச்சி திட்டக் குழு வெளியிட்டுள்ளது. 189 உலக நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் இந்தியா 129-ம் இடத்தில் உள்ளது. உலகின் 28 சதவீத ஏழைகள் (36.4 கோடி பேர்) இந்தியாவில் வாழ்வதாக ஐ.நா.வின் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்

டிச. 9: கர்நாடகத்தில் பதினைந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் (டிச. 5), பா.ஜ.க. பன்னிரண்டு இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த இடைத்தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைத் தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.

312 பதக்கங்களை வென்றது

டிச. 10: நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என மொத்தம் 312 பதக்கங்களுடன் பதின்மூன்றாம் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் போட்டிகளில் நேபாளம் இரண்டாம் இடத்தையும், இலங்கை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

ரிசாட்-2 பிஆர்1 வெற்றி

டிச. 11: இஸ்ரோவின் ‘ரிசாட்-2 பிஆர்1’ என்னும் பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள், ஒன்பது வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி 48 ஏவுகணை மூலம் ஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ‘ரிசாட்-2 பிஆர்1’ செயற்கைக்கோள் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, காட்டியல் ஆகியவற்றுக்குப் பயன்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

2019-ன் சிறந்த மனிதர்

டிச. 11: பிரபல அமெரிக்க இதழான ‘டைம்’, 2019-ம் ஆண்டின் சிறந்த மனிதராக இளம் பருவநிலைச் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பர்க்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. பருவநிலை நெருக்கடியை உலக நாடுகள் அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட இவர் தூண்டுதலாக இருந்தார்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நடைமுறை

டிச. 12: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவை (டிச. 9), மாநிலங்களவை (டிச. 11) என இரண்டு அவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதால், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 2014, டிச. 31 வரை அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்து, பௌத்த, சீக்கிய, சமண, கிறிஸ்தவ, பார்சி உள்ளிட்ட மதத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் இந்தச் சட்டம், இஸ்லாமியர்களை மட்டும் உள்ளடக்கவில்லை.

மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி

டிச. 12: அயோத்தியின் சர்ச்சைக் குரிய நிலத் தகராறு தீர்ப்பை (நவ.9) மறுசீராய்வு செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 18 மனுக்களும் விசாரணைக்கு உகந்தவை இல்லையென்று தள்ளுபடி செய்யப்பட்டன. தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மறுசீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

மீண்டும் பிரதமரானார் போரிஸ் ஜான்சன்

டிச. 13: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் பிரிட்டன் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்.

SCROLL FOR NEXT