வா.ரவிக்குமார்
உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் 4 கோடி பார்வைத் திறனற்றோர் / பார்வைக் குறைபாடுள்ளோர் இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளும் அடங்குவார்கள். அதேநேரம் பார்வைத் திறன் இல்லாவிட்டால் என்ன, எங்களாலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு பெனோ ஜெபின் போன்ற ஐ.எப்.எஸ். அதிகாரிகள்கூட உருவாகியிருக்கிறார்கள்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குத் தேவை பரிதாபம் அல்ல; அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதுதான். இந்த அடிப்படையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை இலவசமாக அளிக்கும் சேவையில் ஈடுபட்டுவருகிறது கர்ண வித்யா அறக்கட்டளை.
அமேசான் போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களிலும், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணி வாய்ப்பை இந்த அமைப்பு ஏற்படுத்தித் தருகிறது. பாலசுப்ரமணியம், ரகுராமன் ஆகியோருடைய வழிகாட்டலில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது.
புது வெளிச்சம்
நந்தனம் அரசுக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் ரகுராமன் தன்னுடைய பணி நேரம் தவிர்த்து, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இந்த சேவையிலும் ஈடுபட்டுவருகிறார். “1999லிருந்து வாசிப்பாளருக்கான மையமாக ரோட்டரி அமைப்பால் இது தொடங்கப்பட்டது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின், ஒரே மாதிரியான பாடங்களை அனைவரும் கேட்கத் தொடங்கினார்கள்.
ஆக, பலரின் தேவையைத் தீர்த்துவைப்பதற்குப் பாடங்களை ஒலிப்பதிவுசெய்து, அதை கேசட்களாகக் கொடுக்க ஆரம்பித்தோம். காதுகள்தானே எங்களின் கண்கள்! இதற்கென ஒரு நூலகமும் தொடங்கினோம். தற்போது பென்டிரைவ் வடிவில் கொடுக்கிறோம்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்களைக்கொண்டே பார்வைத் திறன் குறைந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவும் வழிகளை அடையாளம் கண்டு `த்ருஷ்டி’ எனும் அமைப்பின் மூலமாகச் செயல்படுத்தத் தொடங்கினோம். இதன் வழியாக பார்வையற்றவருக்குப் புத்தகம் சார்ந்த திறனை அதிகப்படுத்தும் வழிகளை ஆராய்ந்தோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை பார்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகள் கலை பிரிவுகளில் பட்டம் பெறுவதற்கான சூழலே இருக்கிறது. அறிவியல் படிப்புகள் இத்தகைய மாணவர்களுக்கு எட்டாக் கனி. அதைச் சாத்தியப்படுத்துவதற்கான வழிகளையும் உருவாக்கி வருகிறோம்.
பார்வையற்ற மாணவர்கள் பெரும்பாலும் அவர்களுடைய உறவுகளாலேயே புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான திறனைக் கொடுத்துவிட்டால், அவர்களின் வேலையை அவர்களே பார்ததுக் கொள்வார்கள். அதற்கான முயற்சிகளை எடுத்தோம். இதற்காக மாற்றுத் திறனாளிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பெங்களூரு `எனேபிள் இந்தியா’விடம் பல திறன்களை நாங்கள் கற்றுத் தேர்ந்தோம்.
அதை ஒட்டி ஆறு மாதப் பணித்திறன் பயிற்சியை 2014-ல் கர்ண வித்யா அறக்கட்டளை மூலமாகத் தொடங்கினோம். 2016-ல் தனி அறக்கட்டளையாகச் செயல்பட ஆரம்பித்தது. எங்கள் அமைப்பின் தலைவர் ரமேஷ் சீனிவாசனும் பார்வைத் திறன் அற்றவர்தான். சொந்த முயற்சியில் கணினி நிபுண ரானவர்.” என்கிறார் ரகுராமன்.
நான்கு விதமான பயிற்சிகள்
தட்டச்சு, கணினி சார்ந்த பயிற்சிகள், ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்துக்குச் செல்வதற்கான இடம்பெயரும் திறன், ஆங்கிலப் பயிற்சி ஆகியவை இங்கே அளிக்கப்படுகின்றன. பணி வாய்ப்புக்கான பயிற்சியைப் பெறு பவர்களுடன், ஏற்கெனவே பணியில் இருக்கும் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் தங்களின் திறனை மேம்படுத்திக்கொள்ளும் பயிற்சிகளைப் பெறுகின்றனர்.
இதைத் தவிர, ஒரு மாணவர் படித்துக்கொண்டிருக்கும் போதே தேவை அடிப்படையிலான பயிற்சியையும் வழங்குகிறார்கள். இவர்களுடைய பணிவாய்ப்புப் பயிற்சியை ஆறு மாத காலம் பெறுபவர்களுக்கு `நேஷனல் கரியர் சர்வீஸ் சென்டர் ஃபார் டிபரன்ட்லி ஏபில்டு’ - மத்திய அரசின் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
இரண்டு சவால்கள்
ஸ்கிரீன் ரீடர் எனும் திரை வாசிப்பானைக் கணினியில் பொருத்திவிடுவதன்மூலம், மாற்றுத் திறனாளிககளும் கணினி சார்ந்த பணிகளைத் திறம்படச் செய்யும் பயிற்சியைப் பெறுகின்றனர். இவர்கள் நடத்தும் ‘கோர்ஸ் ஆன் அக்ஸஸபிலிட்டி ‘ போன்ற பயிற்சிகளின் மூலம் ஐடி, ஐடிஇஎஸ், பேங்கிங் தொடர்பான பணிகளில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
“இரண்டு விதமான சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஒன்று, தங்களாலும் வங்கி, பி.பி.ஓ. நிறுவனங்களில் பணிபுரிய முடியும் என்னும் நம்பிக்கையைப் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளிடத்தில் ஏற்படுத்துவது. இரண்டாவது, பார்வை உள்ளவர்கள் செய்யும் நேர்த்தியோடு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளாலும் பணிகளைச் செய்ய முடியும் எனும் நம்பிக்கையை நிறுவனங்களிடம் ஏற்படுத்துவது.
ஸ்கோப் இ-நாலெட்ஜ் நிறுவனம், அவர்கள் தரும் மாட்யூல்படி தேர்ச்சிபெற்ற 12 பேரைப் பணிக்கு எடுத்துக்கொண்டுள்ளது. கலசலிங்கம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து பார்வையற்ற மாணவர்களுக்கான பயிற்சியை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்துகிறோம் இதெல்லாம் குறுகிய காலத்தில் நாங்கள் தொட்டிருக்கும் மைல்கற்கள்” என்று நிறைவு செய்கிறார் ரகுராமன்.
மடை மாற்றும் டெய்ஸி
வேர்டு டாகுமென்ட்டுக்குப் பதிலாக டெய்ஸி எனும் வடிவத்தில் எழுத்துக் கோப்புகளை கர்ண வித்யா அமைப்பினர் பதிவேற்றுகின்றனர். இதுதான் உலகம் முழுவதும் பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வடிவம். இந்த வடிவத்தில் பிளஸ் 1 வகுப்பின் எல்லாப் பாடப் பிரிவுகளையும் பதிவிட்டு தமிழக அரசிடம் கொடுத்திருக்கின்றனர். பிளஸ் 2 வகுப்பின் பாடங்களையும் மாற்றும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கின்றனர்.
புக் க்ஷேர் எனும் பொதுத் தளத்தில் டெய்ஸி முறையில் மாற்றும் படைப்புகளைப் பதிவேற்றிவிடுகின்றனர். உலகின் எந்த மூலையில் இருக்கும் மாணவர்களும் இந்தப் பாடங்களைப் படிக்க முடியும். எல்லா மொழியிலும் இத்தகைய டெய்ஸி முறைப் பாடங்கள் அந்த வலைதளத்தில் இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வலைதளத்தை மாணவர்கள் இலசவசமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரகுராமன் தொடர்புக்கு : 9840018012