தொகுப்பு: கனி
புதிய இந்திய வரைபடம்
நவ.2: இந்தியாவின் புதிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர், லடாக் உருவாக்கப்பட்டதைத் (அக்.31) தொடர்ந்து, மத்திய அரசு புதிய இந்திய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 22 மாவட்டங்கள், லடாக்கில் 2 மாவட்டங்களுடன் புதிய வரைபடம் வெளியாகியுள்ளது.
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு
நவ.4: கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஜனவரி 15 முதல் தொடங்கும் என்று தமிழ்க் கலாச்சார, தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார். கீழடியில் ரூ. 12.21 கோடியில் தொல்பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளுக்கான திரள்நிதித் தளம்
நவ. 5: தமிழக அரசின்கீழ் இயங்கும் 17, 844 அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திரள்நிதித் தளத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். https://contribute.tnschools.gov.in என்ற இந்தத் தளத்தில், ஒவ்வொரு அரசுப் பள்ளியின் உள்கட்டமைப்புத் தேவையும் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தளத்தின் மூலம் அரசுப் பள்ளிக்கு நிதி, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
இணையச் சுதந்திரம் இல்லை
நவ.5: 2019 இணையச் சுதந்திர அறிக்கையில், உலக நாடுகளில் இணைய சுதந்திரத்தை மோசமாக துஷ்பிரயோகம் செய்யும் நாடாகச் சீனா அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சமூக ஊடக நெருக்கடி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில், இந்தியா 55 மதிப்பெண்களுடன் ‘ஓரளவு சுதந்திரம்’ உள்ள நாடு என்ற பிரிவில் இடத்தைப் பிடித்துள்ளது.
உலகப் பருவநிலை அவசரநிலை
நவ.5: ‘பயோசயின்ஸ்’ இதழில், உலகின் 153 நாடுகளைச் சேர்ந்த 11,258 விஞ்ஞானிகள் ‘உலகளாவிய பருவநிலை அவசரநிலை’யை அறிவித்திருக்கிறார்கள். பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வை அதிகரிக்கும் மனிதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், மனித இனம் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று உலக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.
விண்மீனிடை வெளியை அடைந்த வாயேஜர் 2
நவ.5: நாசாவின் ‘வாயேஜர் 2’ விண்கலம் விண்மீனிடை வெளியை (interstellar space) அடைந்துள்ளது. சூரிய மண்டலத்தை வெற்றிகரமாகக் கடந்து சென்ற இரண்டாவது விண்கலமாக ‘வாயேஜர் 2’ ஆகியிருக்கிறது. 1977-ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், 42 ஆண்டுகள் நீண்ட பயணத்துக்குப் பிறகு, சூரியன்சூழ் வான்மண்டலத்தை அடைந்துள்ளது.
அயோத்தி வழக்குத் தீர்ப்பு
நவ.9: அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு ஐந்து ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மகாராஷ்டிர முதல்வர்
நவ.9: மகாராஷ்டிரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த பிறகும், பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க முடியாத தால், இடைக்கால முதல்வர் தேவந்திர ஃபட்னவிஸ் ராஜினாமா செய்தார். இந்தத் தேர்தலில் பா.ஜ.க. 105, சிவ சேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. முதல்வர் பதவியை இரண்டு கட்சிகளும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததால், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைவதில் இழுபறி நீடிக்கிறது.