தொகுப்பு: கனி
ஹரியாணா முதல்வர் பதவியேற்பு
அக்.27: ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கட்டார் பதவியேற்றார். துணை முதல்வராக ஜனநாயக் ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்றார். ஹரியாணாவில் பா.ஜ.க., ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமை நீதிபதி
அக்.29: உச்ச நீதிமன்றத்தின் 47-ம் தலைமை நீதிபதியாக ஷரத் அரவிந்த் போப்டே நியமிக்கப் பட்டுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிக்காலம் முடிவடைந்ததால் அடுத்த தலைமை நீதிபதியாக ஷரத் அரவிந்த் போப்டே நியமிக்கப் பட்டுள்ளார். நவம்பர் 18 அன்று அவர் பதவியேற்கிறார்.
குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்
அக்.31: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவருமான குருதாஸ் தாஸ்குப்தா (82) கொல்கத்தாவில் காலமானார். 14-ம் மக்களவை(2004), 15-ம் மக்களவையிலும் (2009) நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்டுள்ளார்.
லடாக்கின் முதல் துணைநிலை ஆளுநர்
அக். 31: லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராகத் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஆட்சியர் ராதாகிருஷ்ண மாத்துர் பதவியேற்றார்.
ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநர்
அக். 31: ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மூ பதவியேற்றார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஆட்சியரான இவர், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் கூடுதல் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியவர்.
டெல்லியில் சுகாதார அவசரநிலை
நவ.1: டெல்லியில் காற்றின் தரம் கடுமையாகக் குறைந்ததால், சுகாதார அவசர நிலையை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய குழு அறிவித்துள்ளது. டெல்லி - என்.சி.ஆர். பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கும் இந்தக் குழு தற்காலிகத் தடைவிதித்துள்ளது.
10,926 பேருக்கு ஒரு மருத்துவர்
நவ.1: இந்தியாவில் 10, 926 பேருக்கு ஒரு அரசு அலோபதி மருத்துவர் மட்டுமே இருப்பதாக மத்திய சுகாதாரப் புலனாய்வுப் பிரிவின் (CBHI) 2019 அறிக்கை தெரிவிக்கிறது. உலகச் சுகாதார மையம், ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
சந்திரயான் 2: ஆர்கான்-40 கண்டுபிடிப்பு
அக்.31: சந்திரயான் 2 ஆர்பிட்டர், நிலவின் புறவளி மண்டலத்தில் ‘ஆர்கான்-40’ என்ற ஓரிடத் தனிமத்தைக் கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 ஆர்பிட்டர் படம்பிடித்த நிலவின் பரப்பை இஸ்ரோ இதற்குமுன் வெளியிட்டது.
அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை
நவ.1: நாட்டில் 2011-12 முதல் 2017-18 வரையிலான ஆறு ஆண்டுகளில் 90 லட்சம் வேலை இழக்கப்பட்டிருப்பதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சம் வேலை வாய்ப்புகள் இழக்கப்படுவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதிகரிக்கப்போகும் தன்னாட்சிக் கல்லூரிகள்
அக்.30: தன்னாட்சிக் கல்லூரிகளை அதிகரிக்கப்போவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள 49,000 கல்லூரிகளில் 708 கல்லூரிகள் மட்டுமே தன்னாட்சியுடன் இயங்கி வருகின்றன. மேலும் 1000 கல்லூரிகளைத் தன்னாட்சிக் கல்லூரிகளாக மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டுள்ளது.