நான் பி.எஸ்சி. வேதியியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். எனக்குச் சிறந்த கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்க வேண்டுமென ஆசை. இதற்கான நுழைவுத் தேர்வுகள் பற்றிக் கூற முடியுமா? - மாதவன், பாளையங்கோட்டை
மேலாண்மைப் படிப்பில் சேர நம் நாட்டில் பல்வேறு நுழைவுத் தேர்வு கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை.
CAT காமன் அட்மிஷன் டெஸ்ட் எனப்படும் கேட் தேர்வானது உலகின் கடுமையான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் நாட்டிலுள்ள 20 ஐ.ஐ.எம்கள் மட்டுமல்லாது சுமார் 1,300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை மேற்கொள்கின்றன.
இந்தத் தேர்வானது 2 மணி நேரம் இணைய முறையில் நடைபெறும். இதனை ஆண்டுதோறும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இதில் வெற்றி பெற்று ஐ.ஐ.எம்கள் அல்லது முதன்மையான கல்வி நிறுவனங்களில் சேர முடிந்தால் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
CMAT இந்தத் தேர்வை NTA எனப்படும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத்துகிறது. ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் 1,300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சேர்க்கை மேற்கொள்கின்றன.
XAT சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட். இதுவும் புகழ்பெற்ற நுழைவுத் தேர்வாகும். இந்தத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் சுமார் 800 கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை மேற்கொள்கின்றன.
NMAT நர்சி மோன்ஜி ஆப்டிடியூட் டெஸ்ட். இத்தேர்வு வழக்கமாக அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் நடைபெறும். 30 மேலாண்மைக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு இது.
MAT மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட். இதுவும் புகழ்பெற்ற நுழைவுத் தேர்வாகும். 2 மணி நேரம் நடைபெறும். இந்தத் தேர்வானது 1998 முதல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வைச் சுமார் 600 கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இதை AIMA ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசி யேஷன் நடத்துகிறது.
SNAP சிம்பயாசிஸ் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட். சிம்பயாசிஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 17 கல்வி நிறுவனங்கள் நடத்திவரும் 29 எம்.பி.ஏ. படிப்புகளுக்காக இத்தேர்வு நடத்தப்படு கிறது. இந்தத் தேர்வு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறும்.
ATMA எய்ம்ஸ் டெஸ்ட் ஃபார் மேனேஜ்மெண்ட் அட்மிஷன்ஸ். இந்தத் தேர்வானது தேசிய அளவில் முதுகலைப் படிப்பான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.ஜி.டி.எம். போன்றவற்றுக்கு நடத்தப்படு கிறது. இதனை அசோசியேஷன் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட் ஸ்கூல் நடத்துகிறது. இதை 750 கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்காக ஏற்றுக்கொள்கின்றன.
IBSAT ICFAI பிசினஸ் ஸ்கூல் ஆப்டிடியூட் டெஸ்ட். இக்கல்வி நிறுவனத்தின் சேர்க்கைக்காக நடத்தப் படுகிறது. இது 2 மணி நேரத் தேர்வாகும்.
MICAT இந்தத் தேர்வானது ‘முத்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனி கேஷன்ஸ் அகமதாபாத்’தினால் நடத்தப்படுகிறது. இது ஆண்டுதோறும் டிசம்பர் (MICAT 1), ஜனவரியில் (MICAT 2) நடத்தப்படுகிறது. மேலே குறிப்பிட்ட தேர்வுகளைத் தவிரவும் பல மாநிலங்கள் அந்தந்த மாநிலத்திலுள்ள மேலாண்மைப் படிப்புகளில் சேரத் தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. அவற் றில் சிலவற்றைப் பார்ப்போம்.
MAHCET (மகாராஷ்டிரம்), TS ICET (தெலங்கானா), AP ICET (ஆந்திரப் பிரதேசம்), OJEE (ஒடிசா), PGCET – இந்தத் தேர்வு கர்நாடக மாநிலத்திலுள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.டெக். படிப்புகளுக்காக நடத்தப்படு கிறது.
TANCET தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட். இந்தத் தேர்வு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. / எம்.டெக். போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை நடை பெறும். 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் எம்.பி.ஏ. படிப்புக்கான சேர்க்கைக்கு இதன் மதிப்பெண்களை ஏற்றுக்கொள் கின்றன.
மேற்கூறியவை, மேலாண்மைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த ஓர் அறிமுகமே. உங்களின் இலக்கு, மனோதிடத்தின் அடிப் படையில் கடின உழைப்பு இருந்தால் வெற்றியடையலாம்.
- கட்டுரையாளர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் திட்ட இயக்குநர்