திசைகாட்டி

முன்னோடித் துணைவேந்தர் வே.வசந்தி தேவி | அஞ்சலி

நா.மணி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1990ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பேராசிரியர் வசந்தி தேவி 1992இல் துணைவேந்தர் ஆனார். அறத்தை நோக்கிய பயணமும், தைரியமும், சமூகத்தின் மீதிருந்த அன்பும்தான் அவர் பணியிலிருந்த ஆறாண்டுக் காலத்தில் செயற்கரிய செயல்களைச் செய்ய வைத்தது. அங்கு அவர் மேற்கொண்ட முக்கியப் பணிகளில் சிலவற்றை, பேராசிரியர் வ.பொன்னுராஜ் பகிர்ந்துகொண்டார்.

கல்வி முன்னோடி: இன்றைக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்பது, மறுமதிப்பீட்டு விண்ணப்பம் செய்வது, முந்தைய மதிப்பீடு சரியில்லை என்றால் அதிக மதிப்பெண் பெறுவதும் இயல்பாக நடக்கின்றன. இதற்கான முன்னோடி வசந்தி தேவி. அவர்தான் இந்த முறையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்தார். ஆசிரியர்களின் முழு ஒப்புதலோடு இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

1990ஆம் ஆண்டில் கல்லூரிகளில் வாங்கும் கட்டாய நன்கொடையைத் தடைசெய்யும் சட்டம் வந்தது. என்றபோதும் புகார்கள் வந்த கல்லூரிகள் மீது பல்கலைக்கழக அளவில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று சிந்தித்துச் செயலாற்றினார். அத்தகைய கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேறு எந்தப் பாடப் பிரிவும் தொடங்க அனுமதி மறுத்தார்.‌

கல்லூரிப் படிப்பைத் தவிர இளைஞர் நலத்துறை மூலமாக மாணவர்களின் பன்முக ஆற்றலை வளர்க்கப் பல திட்டங்கள் திட்டமிடப்பட்டன. இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையம் ஒன்றைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார். இத்தகைய பணிகளை நிறைவேற்றப் பேராசிரியர் ச.மாடசாமி போன்றவர்களைக் கல்லூரிகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவந்தார்.

அந்தக் காலத்தில் ஒரு பல்கலைக்கழகம் தனித்து புத்தகத் திருவிழாவை நடத்த முடியும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இரண்டாவது முறை துணைவேந்தரானபோது பல்கலைக்கழகத்தில் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழகத்தில் கட்டிடங்கள் கட்டக் கிடைத்த இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் லஞ்ச ஊழல் இல்லை என்று எல்லாருக்கும் அறியும் வண்ணம் அதைக் கட்டி முடித்தார்.

மாணவர்களின் துணைவேந்தர்: பேராசிரியர் வசந்தி தேவி எப்போதும் மாணவர் மையத் துணைவேந்தராக விளங்கினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். ஆண்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த கல்லூரிகள் பலவற்றை இருபாலர் பயிலும் கல்லூரிகளாக மாற்றினார். மாணவர் குறைதீர்ப்பு குழுக்களை அனைத்துக் கல்லூரிகளிலும் உருவாக்கினார். தேர்வு காலத்தில் பல்கலைக்கழகத்தின் சார்பாக மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்குச் சிறப்புத் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பணிநீக்கம் காரணமாகப் பல்கலைக்கழகத்தின் தற்காலிகப் பணியாளர்கள் போராடிக் கொண்டிருந்தபோது துணைவேந்தராகப் பொறுப்பு ஏற்றதும் அவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்க உரிய ஏற்பாடுகளைச் செய்தார். வசந்தி தேவி பணியாற்றிய ஆறாண்டு காலமும் பேராசிரியர்கள் சங்கத்தோடு (MUTA) இணைந்தே பணியாற்றினார்.

அவர்களுடைய ஒப்புதலோடு எல்லாப் பணிகளையும் முன்னெடுத்தார். இரண்டாவது முறையும் துணைவேந்தராகி தன்னால் இயன்ற சேவைகளைச் செய்தார். ஒருவர் ஒரு பல்கலைக்கழகத்தில், தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே துணைவேந்தராக இருக்க முடியும் என்பது பல்கலைக்கழகத்தின் விதி.

- கட்டுரையாளர், பேராசிரியர்; tnsfnmani@gmail.com

SCROLL FOR NEXT