ஜூலை 23: சட்ட மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவரும் ஆளுநரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்ற அரசமைப்பு சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 23: சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் நிலைய லாக் அப் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து வழக்கின் முதல் எதிரியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 23: நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததௌ குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்தது. முழு பதவிக் காலம் முன்பே பதவி விலகிய முதல் குடியரசுத் துணைத் தலைவர் தன்கர் ஆவார். இதற்கு முன்பு வி.வி.கிரி (1969), ஆர்.வெங்கட்ராமன் (1987) ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் துணைத் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகினர்.
ஜூலை 24: சென்னை குன்றத்தூர் அருகே 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜூலை 24: மதுரை அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் முன்னாள் தலைவர் பி. நம்பெருமாள்சாமி (85) மதுரையில் காலமானார். இவருக்கு 2007இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஜூலை 24: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விருத்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
ஜூலை 24: தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.வில்சன், அப்துல்லாம, சண்முகம் (திமுக), வைகோ (மதிமுக), அன்புமணி (பாமக), சந்திரசேகரன் (அதிமுக) ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைந்தது.
ஜூலை 25: மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா (திமுக), கமல்ஹாசன் (மநீம) ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
ஜூலை 25: வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. 2025 பிப்ரவரி 13 அன்று 356ஆவது சட்டப் பிரிவின் கீழ் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஜூலை 25: தொடர்ந்து 4078 நாள்கள் பிரதமர் பதவியில் அமர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்தார். இந்திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை 4077 நாட்கள் தொடர்ந்து பதவியில் இருந்தார். ஒட்டுமொத்தமாக 5,825 நாள்கள் (15 ஆண்டுகள், 350 நாள்கள்) பிரதமர் பதவியில் இந்திரா காந்தி இருந்துள்ளார்.
ஜூலை 27: மாமன்னர்கள் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ் நாட்டில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி கங்கைச் சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி அறிவித்தார்.
ஜூலை 27: சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்.
ஜூலை 27: நோய்வாய்ப்பட்ட தெரு நோய்களை கருணை கொலை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜூலை 27: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்கிற பெயரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜூலை 27: மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோர் பதவியேற்றனர்.
ஜூலை 28: நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பரிந்துரை செய்தது.
ஜூலை 28: ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் சக நாட்டவரான கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
தொகுப்பு: மிது