பிளஸ் டூ படித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பது, எங்கு படிப்பது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பது குறித்த தகவல்களைப் புரட்டிப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட வழக்கமான படிப்புகளைத் தாண்டி பல புதிய படிப்புகளும் வந்துவிட்டன. அப்படி பல்வேறு உயர் கல்வி படிப்புகளுக்கான விண்ணப்ப முறை, கடைசி தேதி போன்ற விவரங்களை அறிய:
1. அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள் (TNEA): தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்குப் பதிவு செய்யும் முறை முழுமையாக இணைய வழி விண்ணப்பப் பதிவாகவும், இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் அமைந்துள்ளது. எனவே பொறியியல் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம் அல்லது 1800-425-0110 என்கிற உதவி எண்ணை அழைக்கலாம். கடைசி தேதி: 06.06.2025 | இணையதளம்: https://www.tneaonline.org
2. அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் (TNGASA): தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, ஒருங்கிணைந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம். | கடைசி தேதி: 27.05.2025 | இணையதளம்: https://www.tngasa.in
3. அரசு, தனியார் வேளாண் தொடர்புடைய கல்லூரிகள் (TNAU): மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 தொகுதிக் கல்லூரிகள், 28 இணைந்த கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை (தமிழ் வழி), தோட்டக்கலை (தமிழ் வழி), வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு,வேளாண் வணிக மேலாண்மை, இளம் தொழில்நுட்பம் பிரிவில் வேளாண் பொறியியல், உணவு தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல், சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய 12 பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கடைசி தேதி: 08.06.2025 | இணையதளம்: https://tnau.ac.in
4. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் - டிப்ளமோ படிப்புகள்: தமிழ்நாட்டில் உள்ள 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 414 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள், 12 தன்னாட்சி பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 இணைப்பு பெற்ற கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கடைசி தேதி: 23.05.2025 | இணையதளம்: https://tnpoly.in/
5. அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (TNDALU): சீர்மிகு சட்டப் பள்ளி (School of Excellence in Law), இணைவுப் பெற்ற சட்டக் கல்லூரிகளில் (Affiliated Law colleges)வழங்கும் பட்டப்படிப்புகளுக்கு தனித் தனி விண்ணப்படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தனித்தனி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும், ஏனெனில் பல்கலைக்கழகம் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி தகுதி பட்டியலை வெளியிடும். (இருப்பினும், B.A.LL.B.(Hons.), BBA.LL.B.(Hons.)க்கு விண்ணப்பிக்க ஒரு விண்ணப்பம் போதுமானது). இணைவுப்பெற்ற அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 31.05.2025 | இணையதளம்: https://www.tndalu.ac.in
6. அரசு கவின்கலைக் கல்லூரிகள்: காட்சித் தொடா்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண் வடிவமைப்பு, துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் ஆகியன சென்னையில் உள்ள கவின்கலை கல்லூரியில் கற்றுத் தரப்படுகின்றன. இதில் முதல் 3 படிப்புகள் கும்பகோணம், மதுரையில் இளங்கலை படிப்புகளாகக் கற்றுத் தரப்படுகின்றன. அரசு கவின்கலைக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.06.2025 | https://artandculture.tn.gov.in
உயர் கல்வி சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை மேலும் அறிய அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பார்க்கவும்.