திசைகாட்டி

சேதி தெரியுமா?: போப் மரணம் முதல் அமைச்சர்கள் ராஜினாமா வரை

தொகுப்பு: மிது

ஏப்.20: கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டார்.

ஏப்.20: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரிக்கப் பணியாளர் நலத் துறைக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுப்பியது.

ஏப்.20: பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஏப்.21: உலகக் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவால் காலாமானார். 2013 மார்ச் 13 அன்று 266ஆவது போப்பாக பிரான்சிஸ் பதவியேற்றார்.

ஏப்.22: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் கொல்லப்பட்டனர். 2019இல் புல்வாமா தாக்குதலுக்குப் பின் நடந்த பெரிய தாக்குதல் இது.

ஏப்.22: ஐஏஎஸ் உள்பட சிவிஸ் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 1,009 பெர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். தமிழக அளவில் தருமபுரியைச் சேர்ந்த சிவசந்திரன் முதலிடம் பிடித்தார்.

ஏப்.23: காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்பட பாகிஸ்தானுக்கு எதிராக 5 நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஏப்.23: டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏப்.23: சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1996-2001 திமுக ஆட்சியில் துரைமுருகன் ரூ.3.92 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக 2002இல் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைவரையும் விடுவித்து 2007இல் வேலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து 2013இல் உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஏப்.23: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் அவருக்கு காலகெடு விதித்தது.

ஏப்.23: சைவம், வைணவம், பெண்களை இழிவாகப் பேசிய பொன்முடி மீது தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்குமாறு தலைமை நீதிபதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிந்துரை செய்தார்.

ஏப்.24: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாக்குதலுக்குப் பதிலடியாக மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கட்சிகள் அறிவித்தன.

ஏப்.24: இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, போக்குவரத்து, வர்த்தகம், தூதரக செயல்பாடுகள் நிறுத்தம், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அறிவித்தது.

ஏப்.24: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக மற்றொரு வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அவருடைய மனைவியை வேலூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தததை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 2006-2011 திமுக ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக 2011இல் இந்த வழக்குத் தொடரப்பட்டது.

ஏப்.24: முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ஏப்.25: அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாகிஸ்தானியரை அடையாளம் கண்டு உடனே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குபடி மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார்.

ஏப்.25: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84) உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார்.

ஏப்.25: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் தொடங்கியது. இந்த மாநாட்டில் தமிழக அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

ஏப்.25: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராகப் பொறுப்பற்ற பேச்சுகளைக் அனுமதிக்க முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

ஏப்.26: கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

ஏப்.26: போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வாடிகன் நகரில் நடைபெற்றது. இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஏப்.27: தமிழக அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

ஏப்.27: பொன்முடி வசம் இருந்த வனம் மற்றும் காதித் துறை ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி வகித்த மின் துறை சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சு.முத்துசாமிக்கும் கூடுதலாக வழங்கப்பட்டது.

தொகுப்பு: மிது

SCROLL FOR NEXT