பிரபல வெளிநாட்டுப் பல்கலைக்கழகமான அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்துடன் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. சின்டானா அமைப்போடு ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தால் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் திறமையான மாணவர்கள், அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவர்.
இந்த கல்வி ஒப்பந்தத்தின் மூலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் சென்று, அதோடு எம்.எஸ் படிப்பையும் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பெறுவர். கல்வி ஆண்டில் ‘0.5+1 MS’ என்கிற திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக்குச் சர்வதேச அளவில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை அளிக்கும் முனைப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதையொட்டி சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியோடு, கல்வி அமர்வுகள் மூலம் இந்த ஒப்பந்தம் குறித்தும், இதில் பங்கெடுப்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கல்லூரி மாணவர்கள், பெற்றோர், கல்லூரி நிர்வாக அதிகாரிகள், அரிசோனா மாகாண பல்கலைக்கழக உறுப்பினர்கள், சின்டானா அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் உள்படப் பலர் சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.