ஜன.28: காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயமடைந்தனர். ஐவர் உள்பட 13 மீனவர்களை சிறைபிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து டெல்லியில் இலங்கை தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.
ஜன.28: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரத்தில் சென்னை, மயிலாடுதுறை என தமிழகத்தில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தியது.
ஜன.28: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கின. 32 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஜன.28: இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தணையில் யுனிபைடு பேமண்ட்ஸ் இண்டர்போலின் (யுபிஐ) பங்கு 83 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜன.29: ஸ்ரீரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எஃப்-15 மூலம் என்விஎஸ் - 02 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜன.29: மைனர் பெண்ணாக இருந்தாலும் கருவை கலைக்க சம்பந்தப்பட்ட சிறுமியின் சம்மதம் முக்கியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜன.29: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையையொட்டி நடைபெற்ற ‘அமிர்த ஸ்நானம்’ நிகச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
ஜன.30: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்.1: 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது.
பிப்.2: மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்.2: ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை, தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. இதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் உத்வா ஏரி, சிக்கிமில் ஹேச்ரா பள்ளி சதுப்பு நிலப்பகுதி ஆகியவையும் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டன. இதனால் இந்தியாவில் ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்தது.
பிப்.3: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பிப்.3: சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தீ விபத்து சம்பவம் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றதாக குற்றம் சாட்டி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு ஏடிஜிபி கல்பனா நாயக் எழுதிய கடிதம் வெளியே கசிந்த நிலையில், பெண் டிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித் திட்டம் காரணம் அல்ல என்று சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
பிப்.3: சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது. இசைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.