திசைகாட்டி

எங்கே தவற விடுகிறோம்? - பெண்கள் நலம் | மனதின் ஓசை 7

டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்

இருபத்தியேழு வயதான செல்வி, அவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி. படிப்பு முடிந்த பிறகு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியவர் திருமணத்துக்குப் பிறகும் வேலைக்குச் சென்று வருகிறார். மூன்று வயதில் அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. அன்பான கணவரும் ஓரளவுக்குப் புரிதல் உள்ள குடும்பத்தினரும் அமைந்திருந்தாலும், ஏதோ ஒரு மனக்கவலை அவரை வாட்டியது.

நடந்தது என்ன? - எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாமலும் உடலில் சக்தி இல்லாதது போலவும் போதுமான தூக்கம் இல்லாதது போலவும் அவர் உணர்ந்தார். தன்னுடைய அன்றாடப் பணிகளைச் செய்வதே பெரும் போராட்டமாகவும் பெருமுயற்சி தேவைப்படும் விஷயமாகவும் அவருக்குத் தெரிந்தது. தனக்கு உதவி செய்ய யாரும் இல்லையே, தான் ஏன் வாழ வேண்டும் என்கிற நம்பிக்கையற்ற நிலையில் குழம்பிப்போயிருந்தார் அவர். குழந்தைக்காக எப்படியாவது இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என நினைத்தார்.

தனக்குள் வைத்துப் புலம்பிக் கொண் டிருந்த செல்வி, மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன்னுடைய பிரச்சினைகளை இணையரிடமும் குடும்பத்தினரோடும் பகிர்ந்துகொண்டார். வேலைக்குச் செல்வதை நிறுத்தலாம், வீட்டிலேயே ‘ரிலாக்ஸ்’ செய்யலாம் என ஒவ்வொருவரும் ‘பரிந்துரை’களை வழங்கினர். செல்வி மேலும் பலவீனமாக உணர்ந்தார்.

தனக்குப் பிடித்த ஒரு பாடத்தில் கல்வி கற்று, வேலைக்குச் செல்வதைக் குறிக்கோளாக வைத்து அதை எட்டிப் பிடித்த செல்வி, அந்த வேலையை விட வேண்டிய சூழலில் இருக்கிறோமே என வருந்தினார். இன்னொரு பக்கம் இந்த மனக்கவலையில் இருந்தும் மனப் போராட்டத்தில் இருந்தும் எப்படியாவது மீண்டு வந்துவிடலாம் என்கிற நம்பிக்கையும் அவருக்குக் கொஞ்சம் இருந்தது.

என்றபோதும், எதிர்மறை எண்ணங்களே கூடுதலாக இருந்ததால் தோழியிடம் தன்னுடைய பிரச்சினைகளையும் மனக் கவலையையும் தான் எதிர் கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களையும் பகிர்ந்து கண்ணீர்விட்டு அழுதார் செல்வி.

தன் தோழி வழங்கிய ஆலோச னையை ஏற்று மனநல மருத்துவரைச் சந்திக்க முடிவெடுத்து, என்னிடம் வந்தார். செல்வியின் மனநிலை குறித்துப் பரிசோதித்து அவருக்குத் தைராய்டு உள்ளிட்ட உடல்ரீதியான பிரச்சினைகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை ஆய்வுசெய்து முழுமையான உளவியல் பரிசோதனை செய்தேன். அப்போது அவருக்குத் தீவிரமான மனக் கவலை இருந்ததைக் கண்டறிய முடிந்தது. அதற்கான மனநல மருத்துவச் சிகிச்சையையும் ஆலோசனைகளையும் வழங்கினேன்.

செய்ய வேண்டியது என்ன? - செல்வியின் இணையரிடமும் அவரது பிரச்சினைகளைப் பற்றிப் புரியவைத்தது மட்டுமல்லாமல் இன்றைய காலக்கட்டத்தில் பாலினப் பொறுப்புகள் எப்படி மாறிவருகின்றன, வேலைக்குச் செல்லும் பெண்ணின் வாழ்க்கையை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் சுமக்கும் கூடுதல் பொறுப்புகளை எவ்வாறு பகிர்ந்துகொண்டு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கி னேன். நான் சொன்ன விஷயங்களைப் புரிந்துகொண்ட செல்வியின் கணவர், அவரைத் தொடர்ந்து சிகிச்சைக்கும் அழைத்து வந்தார். சில மாதங்களில் தனது மனக் கவலையில் இருந்து முழுமையாக மீண்டு நலம்பெற்றார் செல்வி.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பணியிடத்திலோ வீட்டிலோ பெரும்பாலும் ஓய்வு இருக்காது. தன்னைக் கவனித்துக் கொள்வதற்கான நேரமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அமைப்பு சாராப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்குக் குழந்தைகளைப் பராமபரிப்பதற்கான இடமும் சீரான பணி நேரமும்கிடைக்காது.

வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் சூழலில் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் ஆன எல்லை மழுங்கடிக்கப் படுவதால் ஒரே நேரத்தில் வீட்டுப்பொறுப்புகளையும், அலுவலக வேலையையும் கையாள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இணையர், குடும்பத்தினரின் உதவி இருக்கும்பட்சத்தில் பெரும்பாலான பெண்களால் சமாளிக்க முடிகிறது. ஆனால், ஆதரவற்ற பெண்கள் கடும் உளவியல் நெருக்கடியை எதிர்கொள் கின்றனர். அதோடு ஆணாதிக்கச் சமுதாயம் வேலைக்குச் செல்லும் பெண் களை அணுகும் விதமும் அவர்களுக்குக் கூடுதல் நெருக்கடிகள் உருவாகக் காரணமாகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களின் மனநிலை பிரச்சினைகளை மாதவிடாய் தொடர்பானதாக மட்டும் சுருக்கிவிடக் கூடாது.

பெண்களின் பிரச்சினைகளைக் குறுகிய கண்ணோட்டத்தோடு அணுகுவது சரியான தீர்வை வழங்காது. சமூகரீதியான மாற்றங்கள் ஏற்படும்போதுதான் வேலைக்குச் செல்லும் பெண்களின் மனநல நெருக்கடிகள் வெகுவாகக் குறையும். வேலைக்கு ஏற்ப பாலியல் பேதமற்ற சம ஊதியம், பாதுகாப்பான அலுவலகச் சூழல், ஓய்வு நேரம், பணியிடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், பாலூட்டும் அறைகள், வரு மானத்துடன் கூடிய பேறுகால விடுப்பைப் போன்று கொள்கை சார்ந்த முடிவுகளைச் செயல்படுத்துவதுதான் வேலைக்குச் செல்லும் பெண்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் முக்கியமான தீர்வாக இருக்கும்.

குற்ற உணர்வுக்குச் சிறிதும் இடம் கொடுக் காமல் தங்களுக்கான நேரத்தை - ஓய்வை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது போலத் தன்னுடைய உடல் நலத்தின் மீதும் மனநலத்தின் மீதும் கண்டிப்பாக அக்கறை கொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்சினை இருந்தால், வேறொருவரைச் சார்ந்திருக்காமல் உடனடியாகத் தீர்வுக்கான வழிகளைத் தேடுவது நல்லது!

- addlifetoyearz@gmail.com

SCROLL FOR NEXT