ஆண்டுதோறும் பல லட்சம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பித்தாலும் அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பதில்லை. ஆனால், முறையாகப் பயிற்சி செய்து தன்னம் பிக்கையோடும் விடாமுயற்சியோடும் தேர்வை எதிர்நோக்கினால் வெற்றி நிச்சயம். ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மத்திய அரசுப் பணிகள் நிரப்பப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒருங் கிணைந்த பட்டதாரி நிலை (SSC-CGL) தேர்வின் மூலம் பட்டதாரிகள் பல் வேறு வேலைகளில் நியமிக்கப்படுகின்றனர்.
ஏ.எஸ்.ஓ. எனப்படும் உதவிப் பிரிவு அதிகாரி (மத்தியச் செயலகச் சேவை), வருமான வரி ஆய்வாளர் (வருமான வரித் துறை), உதவி அமலாக்க அதிகாரி (அமலாக்கத் துறை இயக்குநரகம்), இளநிலை புள்ளியியல் அதிகாரி (புள்ளியியல் அமைச்சகம்), துணை ஆய்வாளர் (மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு), சிபிஐ அதிகாரி போன்று மத்திய அரசு அலுவலகப் பதவிகள் இத்தேர்வின் மூலம் நியமனம் செய்யப்படும் முக்கியப் பதவிகள்.
வயது வரம்பு: 18 முதல் 32 வயதுடையவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 3 வருடங் களும் பட்டியல் சாதியினர், பழங்குடி யினர் ஆகியோருக்கு 5 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பாடத்தில் இளங் கலைப் பட்டம் அல்லது அதற்குச் சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைப் போட்டித் தேர்வில் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அடுத்த தேர்வுக்குத் தேர்ச்சி பெற முடியும். தேர்வாணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்ணை (Cut-off) முதல் தேர்வில் கண்டிப்பாகப் பெற வேண்டும். முதல் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடுத்த தேர்வு எழுதுவதற்கான தேர்ச்சி மட்டுமே. இரண்டாம் நிலைத் தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் பணி வழங்கப்படும்.
எப்படித் தயாராவது? - 100 கொள்குறி வினாக்களைக் கொண்ட கணினி வழித் தேர்வுக்கான நேரம் 60 நிமிடங்கள். பொது நுண்ணறிவு (Reasoning), அடிப்படை கணித அறிவு, அடிப்படை ஆங்கில அறிவு, பொது அறிவு ஆகிய நான்கு தலைப்புகளில் தலா 25 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். சரியான விடை ஒவ்வொன்றிற்கும் இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான விடை ஒவ்வொன்றிற்கும் 0.5 மதிப்பெண் குறைக்கப்படும்.
2025ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2025இல் வெளியிடப்பட இருப்பதாகவும் முதல் தேர்வு ஜூன் 2025இல் நடத்தப்பட இருப்பதாகவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கான விண்ணப்பதாரர்களின் முயற்சிகளின் எண்ணிக் கையில் வரம்பு எதுவும் கிடையாது.
நாள்தோறும் 6 மணிநேரம் இத்தேர்வுக்காக ஆறு மாதம் பயிற்சி எடுத்தால், நிச்சயமாக முதல் தேர்வில் தேர்ச்சி பெற முடியும். பின்பு இரண்டாம் நிலைத் தேர்வுக்குத் தயார் செய்து வெற்றி பெற்றால், ஒரு நல்ல அரசுப் பணியில் அமரலாம். இத்தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு www.ssc.gov.in என்கிற இணையதளத்தைப் பார்க்கலாம்.
- கட்டுரையாளர், போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்; success.gg@gmail.com