சேதி தெரியுமா?
டிச.10: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முன்னாள் ஆளுநருமான எஸ்.எம். கிருஷ்ணா (92) உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார்.
டிச.11: கேரள மாநிலம் வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக பெரியார் நினைவகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டிச.11 2024ஆம் ஆண்டுக்கான ‘வைக்கம் விருது’ கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது.
டிச.12: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
டிச.12: இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலம்தான் பிரத்யேகமாக யோகா கொள்கையை அமல்படுத்தியுள்ளது என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
டிச.12: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
டிச.13: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் லிங் லிரெனை 7.5 – 6.5 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் டி. குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 18 வயதில் வென்ற முதல் வீரர் குகேஷ்.
டிச.14: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (76) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
டிச.14: ராணுவ அவசர நிலை பிரகடன விவகாரத்தைத் தொடர்ந்து தென் கொரிய அதிபர் யூன்சுக் இயோலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மூலம் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
டிச.15: உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் (73) உடல்நலக் குறைவால் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் காலமானார்.
தொகுப்பு: மிது