திசைகாட்டி

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது

செப்.27: சென்னை உயர் நீதிமன்றத்தின் 34ஆவது தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் வகையில், 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டில் இருக்கும் டிராம் போக்குவரத்துச் சேவையை நிறுத்த இருப்பதாக மாநில அரசு அறிவித்தது.

செப்.28: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அவருக்குத் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து கே. ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். மேலும், அமைச்சர் பொன்முடி (வனத் துறை), சிவ.வீ. மெய்யநாதன் (பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை), என். கயல்விழி (மனிதவள மேம்பாட்டுத் துறை), எம். மதிவேந்தன் (ஆதிதிராவிடர் நலத் துறை), ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (பால் வளத் துறை) ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டன. தங்கம் தென்னரசுக்குக் கூடுதலாகச் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (64) உயிரிழந்தார்.

இயற்கை விவசாயத்துக்காக பத்ம விருது பெற்ற கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவால் காலமானார்.

செப்.29: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் செந்தில் பாலாஜி (மின்சாரம், மதுவிலக்குத் துறை), கோவி. செழியன் (உயர்கல்வி துறை), சா.மு. நாசர் (சிறுபான்மையினர் நலத் துறை), ஆர். ராஜேந்திரன் (சுற்றுலாத் துறை) ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அக்.1: காஷ்மீரில் மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 65.65% வாக்குகள் பதிவாயின.

அக்.3: லெபனான், காசா, ஏமன், சிரியா ஆகிய நாடுகள் மீது குண்டுகள் வீசி இஸ்ரேல் பலமுனைத் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், மத்தியக் கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.

சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பத்து அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது.

SCROLL FOR NEXT