திசைகாட்டி

சேதி தெரியுமா?

செய்திப்பிரிவு

செப்.21: டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி சிங் மர்லேனாவுக்குத் துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஆதிஷி டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராவார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர். ராமை நியமித்துக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.

இந்திய விமானப் படைத் தளபதியாக உள்ள விவேக் ராம் சவுத்ரி ஓய்வுபெற உள்ளதையடுத்து, புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்.22: ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வென்றது. செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது முதல் முறை.

இந்தியச் சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

செப்.23: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி (என்பிபி) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனுரகுமார திசாநாயக்க அதிபராகப் பதவியேற்றார்.

சிறார்களின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

செப்.24, 25: இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டார். இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஜம்மு காஷ்மீரில் இரண்டாவது கட்டமாக 26 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 57% வாக்குகள் பதிவாயின.

செப்.26: சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

SCROLL FOR NEXT