வெளிநாடுகளில் கல்வி கற்கும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் திட்டத்தை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் பழங்குடியின மாணவர்கள், 2023-24ஆம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 20 மாணவ மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தகுதி: விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதுகலை அல்லது முனைவர் பட்டப்படிப்பு (பி.எச்டி) படித்துகொண்டிருப்பவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.எச்டி பயிலும் மாணவர் முதுகலை பட்டப்படிப்பிலும், முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர் இளங்கலை பட்டப்படிப்பிலும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://overseas.tribal.gov.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதி: விண்ணப்பங்களை ஜூலை 31ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான சான்றிதழ்கள்: விண்ணப்பதாரரின் ஒளிப்படம், குடும்ப வருமானச் சான்றிதழ், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், முதுகலைப் படிப்பு அல்லது பி.எச்டி படிப்பில் இணைந்ததற்கான ஒப்புகைச் சான்றிதழ்.
எந்தெந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம், தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பத்துக்குப் பிறகு உதவித் தொகை பெறுவது தொடர்பான தகவல் என அனைத்து விவரங்களையும் https://overseas.tribal.gov.in/ என்கிற இணையதளத்தில் பார்க்கலாம்.