சொந்த வீடு

வீடுகள் தொடர்பான விசித்திரச் சட்டங்கள்

ஜி.எஸ்.எஸ்

வீ

டு வாங்குவது, விற்பது தொடர்பாகப் பல நாடுகளில் பலவிதச் சட்டங்கள் நிலவக் கூடும். ஆனால், சில நாடுகளில் உள்ள சட்டங்கள் வித்தியாசமானவை. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

ரோடு (Rhode) தீவு என்ற இடத்தில் யாரும் தங்கள் வீட்டைச் சுற்றி ஆறடிக்கு மேல் சுவர் அல்லது வேலி எழுப்பக் கூடாது. அப்படி இருந்தால் பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு தொடரலாம். எல்லோரும் தன் வீட்டைச் சுற்றியுள்ள காட்சிகளைத் தடையில்லாமல் கண்டு அனுபவிக்கும் வசதி வேண்டும் என்பதுதான் இந்த விதிக்கான காரணம்.

போலந்து நகரிலுள்ள வார்சா நகரில் நீங்கள் வீட்டை வாங்கலாம். ஆனால், நிலத்தை வாங்க முடியாது. நிலம் அனைத்தும் அரசுக்குச் சொந்தம். எப்போது தேவை என்றாலும் நகராட்சிக் குழு உரிய நோட்டீஸ் கொடுத்துவிட்டு உங்கள் வீட்டை இடிக்கலாம். இந்த விதிக்கு சமீபத்தில் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு வீட்டில் பேய் உலவுகிறது என்று நம்பிக்கை இருந்தால் அந்த உண்மையையும் கூறிவிட்டுதான் அந்த வீட்டை யாருக்கும் விற்கலாம். இல்லையென்றால் அந்தப் பரிவர்த்தனை செல்லாது. இது நியூயார்க்கின் சட்டம்.

ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் நிம்மதியாக அதிக நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கும்போது பக்கத்து வீட்டில் பெரும் சப்தத்துடன் புல்வெளியைச் சமனாக்கும் கருவியை இயக்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? நியூயார்க் மற்றும் ஹவாய் பகுதிகளில் இவை சட்ட மீறல்கள். மீறுபவர்கள் கைதுசெய்யப்படலாம்.

ஒரு வீடு என்று இருந்தால் அதைச் சுற்றித் தாவரங்கள் வைக்கப்படும்போது அதன் அழகு மேலும் கூடும். ஆனால், கலிஃபோர்னியாவில் வீட்டுக்கு வெளியே எவ்வளவு செடிகள் வைக்கலாம், என்ன மாதிரியான செடிகளை வைக்கலாம் என்ற கட்டுப்பாடு உண்டு. மீறினால் அபராதம்.

வாஷிங்டனில் உள்ள ஒரு சிறு நகரில் ஒரு கட்டிடத்துக்கு அதிகபட்சம் இரண்டு டாய்லட்களைத்தான் கட்டலாம். தண்ணீர் சேமிப்பதற்காக இந்த ஏற்பாடாம்.

உங்கள் வீடு, அதன் கதவுகள், உங்கள் இஷ்டத்துக்கு அவற்றுக்கு வண்ணம் பூசுவதை யார் தடுக்க முடியும்? செயிண்ட் லூயி நாட்டில் பழங்கால வீடு என்றால் அவற்றில் எந்த வகை வண்ணம் தீட்டப்படலாம், கதவுகள் மாற்றப்படலாமா என்பது குறித்தெல்லாம் அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

அரிசோனா மாநிலச் சட்டத்தின்படி வீடு இழந்தவரோ பிச்சைக்காரரோ வந்து கேட்டால் தண்ணீரும் உணவும் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.

SCROLL FOR NEXT