இ
ந்தியாவின் முக்கிய நகரங்களின் வீடு விற்பனை சரிவடைந்துள்ளதாக தனியார் இணைய ரியல் எஸ்டேட் வர்த்தக நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உலக ரியல் எஸ்டேட் மந்த நிலை இந்தியச் சந்தையிலும் நீடித்தது. அதைத் தொடந்து கடந்த் ஆண்டில்தான் இந்திய ரியல் எஸ்டேட் சற்று அதிலிருந்து மீண்டு வந்தது. இப்போது மீண்டும் பின்னடைந்துள்ளது என்பதை ப்ராபர்டி டைகரின் இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வு முடிவின்படி முடிவடைந்த காலாண்டில் 18 சதவீதம் சரிவடைந்துள்ளது. புதிய வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் 53 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது 22,115 வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள்தான் இந்தக் காலாண்டில் புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பூனே, நொய்டா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய ஏழு இந்திய நகரங்களில் வீடு விற்பனையும் புதிய திட்டங்கள் தொடங்குவதும் குறைந்துள்ளதாகப் புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை சொல்கிறது.
அதிகபட்சமாக அகமதாபாத்தில் வீடு விலை 46 சதவீதம் சரிவடைந்துள்ளது. பூனேயில் 32 சதவீதமும் நொய்டாவில் 29 சதவீதமும் பெங்களூருவில் 27 சதவீதமும் சென்னையில் 23 சதவீதமும் கொல்கத்தாவில் 21 சதவீதமும் சரிவடைந்துள்ளன. இருப்பதில் குறைவாக ஹைதராபாதில் வீடு விற்பனை 18 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது.
மற்ற முக்கிய நகரங்களான மும்பையும் குர்கானும் இவற்றில் விதிவிலக்கு. இந்த இரு நகரங்களிலும் வீடு விற்பனை உயர்ந்துள்ளது. மேலும் வீட்டுக்கான தேவையும் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குர்கானில் மிக அதிகபட்சமாக 60 சதவீதம் வீடு விற்பனை அதிகரித்துள்ளது. மும்பையில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.புதிய வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் மும்பையில் 19 சதவீதமாகவும் குர்கானில் 85 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டமும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் ரியல் எஸ்டேட் தொழிலில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் குறைவுக்குக் காரணமாகவும் இவை இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் தீபாவளியைத் தொடர்ந்து வரவிருக்கும் விழாக்காலத்தால் மீண்டும் ஒரு ஏறுமுகம் வீடு விற்பனையில் ஏற்பட்டுவருவதும் கவனிக்கத்தக்கது.