சொந்த வீடு

விநோதமான பள்ளிக் கட்டுமானங்கள்

ஜே.கே

உலக எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8

கல்விச் செல்வத்துக்கு ஈடு இணையான செல்வம் இல்லை என்கிறது குறள். இன்னொரு இடத்தில் கற்றோருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்றும் கல்வியின் புகழ்பாடுகிறது. அப்படிப்பட்ட கல்வியைக் கொடுப்பதில் ஆசிரியர், தரமான பாடங்கள் இவற்றைத் தாண்டி கற்றுக்கொடுக்கும் இடமும் முக்கியம். அதாவது கல்விச் சாலைகளின் கட்டிடச் சூழல். தரமான கல்வி நிலையங்கள் குறித்த தரவரிசைப் பட்டியல் ஆசியர்-மாணவர் சதவீதம், பாடத்திட்டம் ஆகியவற்றுடன் கல்விச் சாலைகளின் உள்கட்டமைப்பும் ஒரு முக்கியமான அம்சம்.

ஆனால், இன்றைக்கும் முறையான கட்டிட வசதி இல்லாமல் இந்தியாவில் பல பள்ளிகள் இயங்குகின்றன. இதுபோன்று முறையான கட்டிட வசதி இல்லாத பள்ளிகள் தங்களுக்கு இருக்கும் இடத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கல்வியைப் போதித்துவருகின்றன. ஒடியாவில் இந்திரஜித் குரானா அப்படித்தான் ரயில்வே ப்ளாட்பாரம் பள்ளியைத் தொடங்கினார். ரயில் நிலையங்களில் பிச்சை கேட்டு அலையும் சிறுவர்களுக்கு இந்தப் பள்ளியை அவர் தொடங்கினார். அதுபோல மணிப்பூரின் லோக்டாக் ஏரியில் மிதக்கும் பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் நட்டில் படகுகளையே பள்ளிக்கூடங்களாகப் பயன்படுத்திவருகின்றனர். இம்மாதிரியான விநோதமான பள்ளிக்கூடங்களின் தொகுப்பு இது:

டெல்லி மெட்ரோ ரயில் பாலப் பள்ளி, இந்தியா

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஷகர்பூர் பகுதியில் ராஜேஷ்குமார் ஷர்மா என்பவர் குழந்தைகளுக்காக இலவசப் பள்ளியை நடத்திவருகிறார். கடை நடத்திவரும் இவர் இதை ஒரு சமூக சேவையாகச் செய்துவருகிறார். இந்தப் பள்ளியில் 200-க்கும் அதிகமான மாணவர்கள் படித்துவருகின்றனர்.

ஓடியா ரயில்வே பிளாட்பாரம் பள்ளி, இந்தியா

ரயில் நிலையத்தில் ஆதரவற்று அலையும் சிறுவர்களுக்காக இந்திரஜித் குரானா என்பவரால் தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. 70 மையங்களில் செயல்பட்டுவரும் இந்தப் பள்ளியில் இப்போது 2,100 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

மணிப்பூர் மிதக்கும் பள்ளி, இந்தியா

இந்தியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான லோக்டாக் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி இது. அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களுக்காக இந்தப் பள்ளியைத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அந்தப் பகுதி மீனவக் கூட்டமைப்பினர் நடத்திவருகின்றனர்.

மகோகோமிதக்கும் பள்ளி, நைஜிரியா

லாகோஸ் மாகாணத்திலுள்ள மகோகோ கிராமப் புற மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட பள்ளி. ஐநா உதவியுடன் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

டாங்கோன் குகைப் பள்ளி, சீனா

மாவ் கிராமப்புற மாணவர்களுக்காக டாங்கோன் குகையைப் பள்ளியாக மாற்றியிருக்கிறார்கள். 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி 2011-ம் ஆண்டுவரை செயல்பட்டு வந்தது.

அபோ தொடக்கப்பள்ளி, அமெரிக்கா

நியூமெக்சிகோ மாகாணத்தில் அர்டிசியா நகரத்தில் உள்ளது இந்தப் பள்ளி. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான பதற்ற நிலை சமயத்தில் வடிவமைக்கப்பட்டதால் இந்தப் பள்ளி குண்டுவீச்சால் சேதமைடையாமலிருக்க பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

படகுப் பள்ளி, பங்களாதேஷ்

பங்களாதேஷில் முகமது ரிஸ்வான் என்பவரால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

SCROLL FOR NEXT