இந்தக் காலத்தில் சொந்தமாக வீடு, வாசல் கட்டிய பிறகு கல்யாணம் செய்துகொள்ளும் இளைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். வேலையில் சேர்ந்தவுடனேயே வீடு கட்ட வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞர்களையும் இன்று நிறையப் பார்க்க முடிகிறது.
ஆனால், தொடக்க காலத்தில் குறைந்த அளவு சம்பாதிக்கும் இளைஞர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வீட்டுக் கடன் கிடைத்து விடாது. அதுபோன்ற இளைஞர்களுக்கு என்றே இருக்கிறது, ஒரு வீட்டுக் கடன் திட்டம். அதுதான் ஸ்டெப்-அப் வீட்டுக் கடன் திட்டம்.
ஸ்டெப்-அப் கடன்
இந்த வீட்டுக் கடன் வாங்கும் நபர் பணியாற்றும் துறையின் வளர்ச்சி, பணியில் கிடைக்கும் பதவி உயர்வு, அதிகரிக்கும் மாத வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வீட்டுக் கடனுக்கான அளவை உயர்த்தி தரும் கடன் திட்டம். இது முழுக்க முழுக்க படித்து முடித்து விட்டுப் பணியில் சேரும் இளைஞர்களைக் கவரும் வகையில் வழங்கப்படும் கடன்.
இளைஞர்களுக்கு ஏற்ற கடன்
குறிப்பிட்ட இளைஞர் தற்போது குறைந்த அளவு மாத வருமானம் பெற்றாலும்கூட இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் அதிகக் கடனைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் வாயிலாகக் கடன் பெறும் தகுதி அளவை 5 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.
குறைவாகச் சம்பாதிக்கும் போதே வீட்டுக் கடனை அதிக அளவு வாங்கித் தன் கனவு இல்லத்தை அடைய இந்த வீட்டுக் கடன் இளைஞர்களுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம்.
வருவாய்க்கு ஏற்ப இ.எம்.ஐ.
இப்படி வாங்கப்படும் ஸ்டெப்-அப் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது. வங்கிக்கு வங்கி மாறுபடும். சாதாரண வீட்டுக் கடனில் செலுத்துவது போலவே இதிலும் இ.எம்.ஐ. செலுத்த வேண்டும்.
ஸ்டெப்-அப் முறை வீட்டுக் கடன் திட்டத்தில் கடன் தவணைகளை வங்கிகள் பிரித்து வைத்திருக்கும். தொடக்க காலத்தில் வீட்டுக் கடனைச் செலுத்தும் இ.எம்.ஐ. தொகை குறைவாக இருக்கும். பணியில் சேர்ந்த குறிப்பிட்ட இளைஞர் தொடக்க காலத்தில் குறைந்த மாதச் சம்பளம் வாங்குவார் என்பதால் இ.எம்.ஐ. தொகை குறைவாக வசூலிக்கப்படும்.
ஆண்டு செல்லச் செல்ல இத்தொகையின் அளவு அதிகரிக்கத் தொடங்கும். அதாவது பணியில் கிடைக்கும் பதவி உயர்வு, அதற்கேற்ப உயரும் வருவாய் ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு இ.எம்.ஐ. தொகை அதிகரிக்கும்.
தனியார் வங்கியில் கடன்
இளைஞர்கள், படிப்பை முடித்துவிட்டுப் பணியில் சேர்ந்தவர்கள் ஆகியோருக்குப் பயன் தரும் இந்தக் கடன் திட்டத்தை ஒரு சில பொதுத் துறை வங்கிகள் மட்டுமே வழங்குகின்றனர்.
தனியார் வங்கிகள், வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகள் இந்தக் கடன் திட்டத்தை தாராளமாக வழங்குகின்றன. தகுதியுடைய இளைஞர்களுக்கு மட்டுமே தனியார் வங்கிகள் இத்திட்டத்தில் கடனளிக்கின்றன.