ஒருகாலத்தில் பரபரப்பாக இயங்கிய கட்டிடங்கள், நீர் வடிந்த ஆறுபோல் இன்று ஆரவாரமற்று இருக்கின்றன. இந்தக் கட்டிடங்களுள் குறிப்பிடத்தகுந்தவற்றை முன்னணி இணைய இதழ் ஒன்று வரிசைப்படுத்தியுள்ளது. கைவிடப்பட்ட கட்டுமானங்களுள் ரயில் நிலையம், ராணுவ மருத்துவமனை, கப்பல், செயற்கைத் தீவுகள் எனப் பலதரப்பிலானவை. அமெரிக்கா, பல்கோரியா, ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இதில் இடம் பிடித்துள்ளன. இந்தக் கட்டுமானங்கள் நூறு, இருநூறு ஆண்டுப் பழமைவாய்ந்தவை.
மிக்சிகன் சென்ட்ரல் ஸ்டேஷன், அமெரிக்கா
இந்த ரயில் நிலையம், மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராய்ட் நகரத்தில் 1913-ம் ஆண்டு கட்டப்பட்டது. சில எதிர் கால ரயில் பாதைகளை வடிவமைத்தபோது, இந்த ரயில் நிலையத்தை மூட வேண்டி வந்தது. 1988-ல் இந்த ரயில் நிலையக் கட்டிடம் கைவிடப்பட்டு அநாதை ஆனது. ஆனால், உண்மையில் ரயில் நிலையமாக இயங்க முடியாத இந்தக் கட்டிடம் இப்போது சினிமாவில் ரயில் நிலையமாக நடித்துவருகிறது.