மத்தியில் புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசின் முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த சில அறிவிப்புகள் காரணமாக அதிகமான அபார்ட்மெண்ட்கள் உருவாகலாம் என்கிறார்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள். பொதுவாகவே வீட்டுக் குடியிருப்புகளைக் கையாளும் ரியஸ் எஸ்டேட் துறை கடந்த ஆண்டில் பல சவால்களைக் கடந்துவந்துள்ளது.
வீடுகள் விற்பனை குறைந்துகொண்டும், விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்துவந்தது. விலைவாசி, வேலை நிரந்தரமின்மை, மந்தமான பொருளாதாரம் போன்ற காரணங்களால் வீடுகளை வாங்குவதில் நுகர்வோர் பெரிய ஆர்வம் காட்டாமல் இருந்துவந்தனர்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சென்னை போன்ற நகரப்புற மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர் கட்டுமானத் துறையினர். வருமான வரிவிலக்குக்கான உச்சவரம்பு இரண்டிலிருந்து இரண்டரை லட்சமாக உயர்த்தப்பட்டதும், வீட்டுக்கடன் வரிவிலக்கு உச்சவரம்பு ஒன்றரையிலிருந்து ஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டதும் இதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. வரிவிலக்கு காரணமாக கிடைக்கும் பணத்தை மக்கள் வீடுகளில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மும்பை, டெல்லி போன்ற காஸ்ட்லி மாநகரங்களில் பட்ஜெட் அறிவிப்பால் கிடைக்கும் சேமிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் சென்னை போன்ற இடங்களில் இந்தச் சேமிப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும். ஆகவே குடியிருப்புக்கான அபார்ட்மெண்ட்களை வாங்குவோர் எண்ணிக்கை உயரக்கூடும்.
வெறுமனே ரியஸ் எஸ்டேட் பார்வையாளர்களாக மட்டும் வலம் வராமல் சென்னைவாசிகள் வீடுகளை வாங்குவதிலும் ஆர்வத்துடன் செயல்படக்கூடும். உபரி வருமானத்தின் சிறு அதிகரிப்பு கூட வீடு வாங்கும் மனநிலையை உருவாக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வீடுகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்பது கண்கூடானது. வீடுகளின் விலை அவை அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து கூடக்குறைய இருக்கும்.
சென்னையில் லக்ஸரி வகை வீடுகளும், பிரீமியம் வகை வீடுகளும், நடுத்தரவர்க்கத்தினருக்கான குறைந்தவிலை வீடுகளும் கிடைக்கின்றன. ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., ஜி.எஸ்.டி., பூந்தமல்லி போன்ற பல இடங்களில் இத்தகைய குடியிருப்புகள் கிடைக்கின்றன.
புதிதாக வீடு வாங்க விரும்புபவர்களைக் குறிவைத்து சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கட்டுமான நிறுவனங்கள் வீடுகளை உருவாக்கி வருகின்றன. அம்பத்தூர், ஆவடி, செம்பரம்பாக்கம், ஒரகடம், மாங்காடு, குன்றத்தூர், வானகரம், கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், சேலையூர் போன்ற பல இடங்களில் இத்தகைய குடியிருப்புகள் புது வீடு வாங்குவோர்களுக்கு வலைவீசிக் காத்திருக்கின்றன.
பட்ஜெட்டில், கட்டுமானத் துறையில் அந்நிய நிதி முதலீட்டுக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன; குறைந்தவிலை வீடுகளைக் கட்டுவோருக்கு அந்நிய முதலீடு கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளன. தங்களது கட்டுமானத் திட்டத்தின் மொத்த மதிப்பில் 30 சதவீதத்தைக் குறைவான விலையுள்ள வீடுகளுக்கு ஒதுக்கும் திட்டங்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன.
இவை எல்லாவற்றாலும் குறைந்தவிலையிலான வீடுகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் குறைந்தவிலையிலான வீடுகளை வாங்குவோரும் அதிகரிப்பார்க்கள் என்பதே கட்டுமான நிறுவனங்களின் நம்பிக்கை.