சொந்த வீடு

ரியல் எஸ்டேட் 2016 துளிகள்

ஜெய்குமார்

ஜனவரி 28

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலில் உருவாக்கப்பட உள்ள முதல் 20 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. தமிழக நகரங்களான கோவை சென்னை நகரங்கள் இந்த முதற்கட்டப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இப்பட்டியலை வெளியிட்டார்.

மே 12

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் எஞ்சிய மற்ற கட்டிடத்தையும் இடிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 28 2014-ம் ஆண்டு நடந்த இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஜூன் 26

மத்திய அரசு அறிவித்த 20 ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த விழா மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்றது.

செப்டம்பர் 4

ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜன் ஓய்வுபெற்றார். 2013-ம் ஆண்டு இந்தப் பொறுப்புக்கு வந்த அவர் ரிசர்வ் வங்கியின் 23-வது ஆளுநர். போபாலில் பிறந்த ரகுராம் ராஜன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை இந்திய அரசின் சிறப்புப் புலனாய்வுத் துறையில் பணியாற்றியவர். ரகுராம் ராஜன் தில்லியிலும் அகமதாபாத்திலும் கல்வி பயின்றார். அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவர். லண்டன் மேலாண்மைப் பள்ளி ஹாங்காங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் கவுர முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

2008-ல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இவரை இந்திய அரசின் கவுரவப் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். அக்டோபர் 2003 டிசம்பர் 2006 வடை சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பணியாற்றியுள்ளார். 2012-ம் ஆண்டு நிதியமைச்சகத்தின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் 2012-2013-ம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார சர்வே நடத்தினார். இவரது காலகட்டத்தில்தான் குறுகியக் கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) தொடர்ந்து குறைந்து வந்தது. இதன் மூலம் வீட்டுக் கடன் வட்டியும் குறைந்தது. குறிப்பாக 2015-ம் ஆண்டு மட்டும் நான்கு முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.

செப்டம்பர் 9

விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக மாற்றப்படுவதற்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம் அது தொடர்பாக முக்கியமான ஆணையைப் பிறப்பித்தது. அதாவது டிடீசிபி சி.எம்.டி.ஏ. போன்ற அமைப்புகளிடம் அனுமதி பெறாமல் நிலங்களை வீட்டு மனைகளாகப் பதிவுசெய்வதற்குத் தடை விதித்தது.

அக்டோபர் 3

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜித் படேல் பிறகு முதன் முறையாக வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன் விகிதத்தில் கால் சதவீதம் அதாவது 0.25 சதவீதம் குறைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி ரெப்போ ரேட் விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாகக் குறைந்தது.

நவம்பர் 2

சென்னை மவுலிவாக்கத்தில் விபத்தில் எஞ்சிய மற்றோரு கட்டிடமும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நொடிப் பொழுடில் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தை இடிக்க ‘இம்போல்சன்’ என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பெரிய கட்டிடங்களை இடிக்க எக்ஸ்கவேடர் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பல்லடுக்குக் கட்டிடங்கள், ஆலயங்கள், பாலங்கள் ஆகியவற்றைத் தரைமட்டமாக்க வெடியை வைத்து அந்தக் கட்டிடத்துக்குள்ளாகவே தகர்க்கும் தொழில்நுட்பத்தையே உலகில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.இந்த ‘இம்போல்சன்’ தொழில்நுட்பம் எனப்படும் உள்வெடிப்பு வசதியை செய்துகொடுக்கின்றன. உலகில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இந்த முறையில்தான் இடிக்கப்படுகின்றன.

இது உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்ற தொழில்நுட்பமாகவும் உள்ளது. கட்டுமானத்தில் எங்கே வெடிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை ஆராய்ந்து, அந்த இடத்தில் துளையிட்டு வெடி மருந்துகளை நிரப்பி ரிலே மூலம் வெடிமருந்துகள் இணைக்கப்படும். கட்டிடம் முழுவதும் ஒரே சமயத்தில் அதிர்வை ரிமோட் மூலம் ஏற்படுத்தி உள்வெடிப்பை ஏற்படுத்துவார்கள். இந்த முறையில் மொத்தக் கட்டுமானமும் அந்தக் கட்டிடம் அமைந்த பகுதிக்குள்ளாகவே சரிந்து குவியும். அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 1990-களில் தொடங்கியது இந்தத் தொழில்நுட்பம். இன்று உலகெங்கும் பிரம்மாண்டக் கட்டிடங்களை நொடிப் பொழுதில் தரைமட்டமாக்க இந்தத் தொழில்நுட்பமே பயன்படுகிறது.

நவம்பர் 3

எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தது. அதவாது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாகக் குறைத்தது. தேனா வங்கியும் 0.05 சதவீதம் வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்தது. நவம்பர் 8 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். வங்கியில் பணம் செலுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பணப் புழக்கம் பாதிக்கப்பட்டது. அதை நம்பியிருக்கும் கட்டுமானத் தொழிலும் பெரும் பாதிப்புக்குள்ளானது.

நவம்பர் 23

சதுப்பு நிலங்கள் தொடர்பான எந்தவித ஆவணத்தையும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது வேறு எந்தவிதச் சொத்துகளுடனோ பத்திரப்பதிவு செய்யக் கூடாது என மாநிலம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு சென்னை மண்டலப் பத்திரப் பதிவு ஐஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT