வீடு கட்ட வேண்டும் என்ற சிந்தனை 1987-ல் என்னுள் முளைத்தது. அரசுப் பணியில் ஆண்டு பன்னிரண்டும், அகவை முப்பதைந்தும் நிறைவடைந்த தருணம் அது.
அந்த மாத ஊதியப் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது “எனக்கு வீட்டுக் கடன் பிடிக்கணும்” எனக் குரல் கொடுத்தார் இடமாறுதலில் புதிதாக வந்த சக ஊழியர். என்னைவிடப் பத்து ஆண்டுகள் பணியில் மூத்தவர். சட்டெனப் பிறந்தது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற சிந்தனை.
அவரது ஊதியச் சான்றை எடுத்துப் பார்த்தேன். வீட்டுக் கடன் நாற்பத் தோராயிரம் வாங்கி இருந்தார். வேலை முடிந்த மாலை நேரம் வீட்டுக் கடன் பற்றித் தெரிந்துகொள்ளப் பேச்சை ஆரம்பித்தேன். “அதை ஏன் கேட்கிறீங்க! லோன் சாங்ஷன் ஆகவே ஏழு வருஷமாச்சு. சிட்டா கொண்டா பட்டா கொண்டான்னு அலைச்சல்... மன உளைச்சல்! வில்லங்கச் சான்று வாங்கத் திரும்பத் திரும்பப் போய் சப்-ரிஜிஸ்டர் விரோதியாகிவிட்டார்” எனப் பொரிந்து தள்ளிவிட்டார்.
அவரது மனக்குறை ஓரளவு உண்மைதான். இன்றைய தேதியில் ‘சம்பளச் சான்றைக் கொண்டு வாருங்கள்... ஏரோப்ளேன் வாங்கக் கடன் தருகிறோம்’ என்று விளம்பரம் செய்கிறார்களே. இந்த வசதி எல்லாம் அப்போது கிடையாது.
கடன் என்னும் கெட்ட வார்த்தை
‘உலகத்தையே அடகு வைக்கிறேன்’ என்று சொன்னாலும் நாம் கேட்ட கடன் உடனே கிடைத்து விடாது. அத்துடன் கடன் என்று சொன்னால் பண்டம், பாத்திரம் நகை நட்டை வாங்கிக்கொண்டு பணம் தரும் அடகுக் கடைதான் நமக்கு அறிமுகமே தவிர, வங்கியில் கடன் பெறலாம் என்பது தெரியாத காலம் அது. வங்கி என்று சொன்னால் சேமிப்பு என்ற பெயரில் பணத்தை வாங்க பிறவி எடுத்ததே தவிர, பணம் கொடுக்க அதாவது கடன் கொடுக்கக் கடமைப்பட்டதல்ல என்பதுதான் சில பல ஆண்டுகளுக்கு முன் வெகுஜன மனோபாவம்.
வேண்டுமானால் கடன் வாங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்த கனவான்களுக்குத் தெரிந்திருக்கும் வங்கி வாங்கி வந்த வரம் கடன் கொடுப்பதுதான் என்பது. மொத்தத்தில் பார்த்தால் ‘கடன்’ என்ற சொல்லே கொஞ்சம் காலத்துக்கு முன்பு வரை ஒரு கெட்ட வார்த்தையாகத்தான் இருந்தது.
1998-ல் தஞ்சை மாவட்டம் பிரிந்தது. இரண்டாகி, பிறகு மூன்றானது. விளைவு திருவாரூர் தனி மாவட்டம் ஆனது. ‘இதனால் இதனை இவண் முடிக்கும்’ என்ற வள்ளுவச் சொல்லம்பு செய்பவரைக் குறிவைத்துச் சொல்லப்பட்டதல்ல. செய்யத் தூண்டுபவரைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. காரணம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நண்பர் அறிமுகமானார். அவர் என்னிடமும் தன் பள்ளித் தோழரான என் சக அலுவலரிடமும் ‘வீட்டுக் கடன் போடுங்களேன்’ என்றார். ‘போடுவோம்’ என்பது எங்களது பதில் ‘புது மாவட்டம் உடனே கடன் கிடைக்கும்’ என்றவர், தாமே இரண்டு விண்ணப்பங்களைக் கொடுத்துப் பூர்த்திசெய்யவைத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
வீடு கட்டப் பொறுமை வேண்டும்
பட்டா, சிட்டா, அடங்கல், துறை அனுமதி, பஞ்சாயத்து அனுமதி, வில்லங்கம் முதலான அத்தனை ஆவணங்களும் கொடுத்து மூன்று மாதம் கழித்து, ‘நாளை மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாருங்கள்’ என்று தகவல்.
ஓடோடிப் போனேன். தேநீர் கொடுத்து உபசரித்த நண்பர், ‘கொஞ்சம் வெயிட் பண்ண வேண்டியிருக்கும்’ என்றார். என்னவோ தடங்கல் என்றதும் ஒட்டு மொத்த உற்சாகமும் வற்றிப் போய்விட்டது.
எனது சோர்வைப் புரிந்துகொண்ட நண்பர், ‘வீடு கட்ட முக்கியமான தேவை என்ன தெரியுமா?’ என்று கேட்டார்.
“கல்லும் மண்ணும்” என்றேன் சுரத்தில்லாமல்.
‘வீடு கட்ட முக்கியமான தேவை பொறுமைதான்’ என்றார் பொட்டில் அடித்த மாதிரி.
அதன் பொருள் புரிந்து விடைபெற்றேன். அடுத்த வாரமே வீட்டுக் கடன் முதல் தவணை வந்துவிட்டது.
விடிந்தால் வீட்டு வேலை தொடக்கம்...
அரசுப் பணிக்கு வருவதற்கு முன் L&T கட்டுமான நிறுவனமான ECCயில் சிறிது காலம் பண்டசாலை (Store Asst.) உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் இருந்ததால் கட்டிடப் பணிகளைப் பற்றி துளி அறிவு என் நினைவில் தேங்கி நின்றது.
வீட்டுமனை போடும் இடத்தில் தரை மட்டம் பார்க்கும் கருவி, கலவை எந்திரம், கம்பியின் துருவை நீக்கும் எந்திரம், கான்கிரீட்டை உறையச் செய்யும் வைப்ரேட்டர் எல்லாம் கட்டுமானப் பணிகளுக்காக வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு கரணையும் ரச மட்டமுமாக மேஸ்திரி காத்திருந்தார். என் நினைவில் நின்ற மேற்கண்ட சாதனங்கள் எதுவும் இங்கு உபயோகிப்பதில்லை என்ற மேஸ்திரி, ‘இந்தச் சின்ன வேலைக்கு அதெல்லாம் எதுக்கு?’ என எதிர்க் கேள்வி கேட்டார்.
தேவைக்கு மேல் வாங்கிய கடன்
வேலை தொடங்கி நடந்தது...
கைக்கலவை போடும் பெரியவர் மண்ணையும் சிமெண்டையும் கலந்து வைத்துத் தண்ணீரை ‘மட மட’வென ஊற்றுவார். சிமெண்ட் பால் கசியாமல் கண்காணிக்கவும், கட்டுமானத்தின்போது செங்கல்லை நனைத்து வைக்கிறார்களா என்று கவனிக்கவும் உறவினர் ஒருவரை நியமித்திருந்தேன்.
என் எல்லாக் கண்காணிப்புகளையும் ஓரளவுதான் செயல்படுத்த முடிந்தது. கட்டுமானம் எல்லாம் ஒருவழியாக முடிந்தது. ஆனால் வங்கிக் கடன் மிச்சமாகக் கையில் இருந்தது.
தேவைக்கு மேல் கடன் வாங்கிவிட்டோமோ அது ஏதும் பிரச்சினை ஆகுமோ என்று எனக்குப் பயம். முன்னால் வீடு கட்டி முடித்திருந்த நண்பரைச் சந்தித்து விவரத்தைச் சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்துவிட்டுச் சொன்னார், ‘கட்டுமான வேலைகள் முடிந்தால் வீட்டு வேலை முடிந்ததாக அர்த்தமல்ல; இனிதான் செலவே ஆரம்பம்’
அவர் சொன்னபடியே ஆனது. மரவேலை, பிளம்பிங், பெயிண்டிங், மின் இணைப்புக்கு மறுபடி ப்ராவிடண்ட் பண்டில் இருந்து கடன் வாங்க வேண்டி வந்தது. வீடு கட்டுவதில் இவ்வளவு சிக்கல் இருந்தாலும் தயங்கித் தயங்கித் தள்ளிப் போட்டுக்கொண்டே போகாதீர்கள். வசதியான இடத்தைத் தேர்வு செய்து கட்டுமானத்தைத் தொடங்குங்கள்.
உங்கள் வீடு உங்கள் அனுபவம்
வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி:
sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு: சொந்த வீடு, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை- 600 002. ,