புத்தக அலமாரிகளில் புத்தகங்களை அடுக்குவதும் ஒரு கலைதான். சரியான முறையில் புத்தகங்களை அடுக்கிவைத்தால் அதுவே வீட்டுக்கு ஒரு ரம்மியமான அழகைக் கொடுக்கும். புத்தக அலமாரிகளில் புத்தகங்களை மட்டும் அடுக்கும் வழக்கம் இப்போது மாறிவிட்டது. புத்தகங்களுக்கிடையில் உங்களுடைய வாழ்க்கையின் அழகான தருணங்களை நினைவுபடுத்தும் பொருட்கள், ஒளிப்படங்கள் போன்ற அம்சங்களை இணைத்துதான் நவீன புத்தக அலமாரி வடிவமைக்கப்படுகிறது. புத்தக அலமாரியை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்...
அளவு முக்கியம்
புத்தக அலமாரிகளைத் தேர்வு செய்யும் அளவையும், பொருட்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மெலிதான அலமாரிகளுடன் வெளிப்படையான வடிவமைப்புடன் இருக்கும் புத்தக அலமாரிகள் சிறந்த தேர்வாக இருக்கும். மரம், பித்தளை என்ற இரண்டு கலவையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகள் அறைக்குப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுக்க உதவும். மிதக்கும் புத்தக அலமாரியாக இருந்தால் தரைமட்டத்திலிருந்து எட்டு அங்குல உயரத்தில் பொருத்தினால் சரியாக இருக்கும்.
பழமையைக் கொண்டாடலாம்
பழமையான பொருட்களை அடுக்குவதற்குத் தனியாக ஓர் இடம் தேட வேண்டிய அவசியமில்லை. அவற்றைப் புத்தக அலமாரிகளில் புத்தகங்களுக்கு மத்தியில் அடுக்கிவைக்கலாம். அத்துடன், சிறியளவிலான கலை பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பின்னணி வண்ணங்கள்
புத்தக அலமாரியின் பின்னணியை வண்ணமடித்தோ, சுவரொட்டிகளை ஒட்டியோ அலங்கரிக்கலாம். இது புத்தக அலமாரிக்கு ஆழமான தோற்றத்தைக் கொடுக்கும். புத்தக அலமாரியின் நிறத்தின் அடர்நிறத்தைப் பின்னணியாக வைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
பெரிய பொருட்களுக்கு முதலிடம்
புத்தக அலமாரியில் அடுக்க நினைக்கும் பொருட்களில் பெரிய பொருட்களை முதலில் அடுக்கவும். அலமாரியின் மேல் அடுக்கின் இடதுபுற ஓரத்தில் நீங்கள் அடுக்க நினைக்கும்பொருட்களை அடுக்கலாம். இந்தப் பொருட்களுடன் புத்தகங்களைக் குறுக்கும் நெடுக்குமாக (Zig - Zag) அடுக்கலாம். வட்ட முனைகளைக் கொண்ட பொருட்களைப் புத்தகங்களுடன் அடுக்குவது பொருத்தமாக இருக்கும். இதேமாதிரி, அலமாரியின் மேல் அடுக்கின் வலதுபுற ஓரத்தில் பொருட்களை அடுக்கவும். கீழே அலமாரிகளில் குறுக்கும் நெடுக்குமான முறையில் புத்தகங்களை அடுக்கவும்.
சிறிய புத்தகங்களும் பெரிய புத்தகங்களும்
பெரிய புத்தகங்களை அலமாரியின் கீழ் அடுக்குகளிலும், சிறிய புத்தகங்களை மேல் அடுக்குகளிலும் அடுக்குங்கள். இந்தப் புத்தக வரிசை ஓரே சீரான வரிசையாக இல்லாமல் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் மாற்றி அடுக்கவும். புத்தகங்களை இரண்டு வரிசையாக அடுக்கும்போது, பெரிய புத்தகங்களை வெளியில் தெரியும்படியும், சிறிய புத்தகங்களை உள்ளேயும் அடுக்கலாம்.
அதிகமான பொருட்கள் தேவையில்லை
புத்தக அலமாரியை அடுக்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதி, புத்தகங்கள், பொருட்கள், காலியிடம் என்ற மூன்று அம்சங்களும் மூன்றில் ஒரு பங்குதான் இருக்க வேண்டும். ஒருவேளை, அடுக்குவதற்குப் பொருட்கள் இல்லையென்றால் புத்தக அலமாரியின் கடைசி வரிசையில் ஒரே மாதிரியாகப் பெட்டிகளையோ, கூடைகளையோ அடுக்கலாம்.
வித்தியாசமாக அடுக்கலாம்
புத்தகங்களைச் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் மட்டும் அடுக்காமல் பிரமிடு வடிவம் போன்ற வித்தியாசமான தோற்றங்களிலும் அடுக்கலாம். உலோகம், பீங்கான், தோல், கிளிஞ்சல்கள் மாதிரியான பொருட்களை இணைத்துப் புதுமையாக அடுக்கலாம். அத்துடன், புத்தக அலமாரியில் சிறிய விளக்குளைப் பொருத்தினால், அந்த அறையில் அறைக்கலன்களை வைத்துக்கொள்ளவும் பயன்படுத்திகொள்ளலாம்.