1970 ஆரம்பத்தில்தான், இனி வீடு என்கிற தன்மையே மாறிப் போய் சென்னையில் பல தளங்கள் (flats) உருவாகிக் கொண்டு வந்தன. ஆனாலும் அதற்கும் முன்பே (1968) பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் போன்ற சில பகுதிகளில் புதுடெல்லி பாணியைப் பின்பற்றி சற்று விஸ்தாரமான இரண்டு அறைகள் கொண்ட தளங்கள் கட்டப்பட்டிருந்தன. வீட்டு வசதி வாரியமும் அங்கு தளங்களைக் கட்டின. இதில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், அந்த நாளில் கட்டிய பிளாட்டுகள் யாவுமே நிறைய இடம் விட்டுக் கட்டப்பட்டதுதான்.
கால ஓட்டத்தில், சென்னை மாநகரம் பெரியதாக வளர்ந்து விட்டது. வேறு மாவட்டத்திலிருந்தும் கிராமப்புறத்திலிருந்தும், சென்னையில் மக்கள் குடியேறியதால் இட நெருக்கடி ஏற்பட்டு விட்டது. விளைவு? குடியிருப்புப் பகுதிகள் பலவற்றில் பல தனி வீடுகள் தளங்களாக மாறிவிட்டன.
அதே சமயம் சென்னை அபிராமபுரம், பெசன்ட் நகர் போன்ற மையமான இடங்களில் 900 ச. அடி உள்ள தளங்களில் வசிப்பவர்களுக்கு ஆசை எழுகிறது. இன்னும் ஓர் அறை இருந்தால் வசதியாக இருக்குமே, நவீன டைல்ஸ்களுடன் வீட்டைப் புதுப்பிக்கலாமே?
விளக்கங்கள் கேள்வி பதில் வடிவில்...
தளங்களை விரிவாக்கம் செய்யும்போது அனைவரிடமும் அனுமதி பெற வேண்டுமா?
ஆமாம், ஒவ்வொரு தளத்திலும் வேறு வேறு உரிமையாளர்கள் இருப்பார்கள். எனவே புதிதாக தளங்களை எழுப்புவதற்கு முன்பாக ஒவ்வொரு உரிமையாளரிடமும் தனித்தனியே ஒப்புதல் பெற வேண்டும். மற்றபடி சி.எம்.டி.ஏ. அனுமதி பெறுவது, இடிப்பதற்கு ஒப்புதல் வாங்குவது, குறிப்பிட்ட நபருக்கு அதிகாரப் படிவம் (Power of Attorney) அளிப்பது போன்ற எல்லா அம்சங்களும் இதில் உண்டு.
இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லலாம், பிற மாநிலங்களில் விதிகள் வேறுபடுகின்றன. ஆந்திராவில் மெஜாரிட்டி அங்கத்தினர் (எட்டு தளங்களில் ஐந்து பேர்) ஒப்புதல் அளித்தாலே போதுமானது.
இங்கும் நட்ட ஈடு (Compensation) கிடைக்குமா?
இதற்கு பொதுவான பதில் இல்லை. நஷ்ட ஈடு என்பது மொத்த தளங்கள், மொத்த சதுர அடி போன்ற பல அம்சங்களைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். சாஸ்திரி நகரில் 12 கிரவுண்டில் 14 தளங்கள் உள்ளன. இங்கு லிஃப்ட் வசதியும் உள்ளது. இது போன்ற இடங்களில் இடித்துக் கட்ட, ஓர் அறையை மட்டும் சிறிது கூடுதலாக்க, உத்தேசமாக 5 அல்லது ஆறு லட்சம் தருவார்கள். வேறு வீட்டுக்குக் குடி பெயர்ந்தால், அவர்களுக்கு வாடகையும் ஒப்பந்தக்காரர் அளிப்பார். ஆனால் இது அனைத்துத் தளங்களிலும் நடக்காது.
நட்ட ஈடு கிடைக்காவிட்டால் என்ன லாபம்? புதிய தளம் எழுப்பும்போது, வாடகை கிடைக்காவிட்டால்?
எப்படியும் லாபம்தான். பழைய தளம் (35 அல்லது 40 ஆண்டு பழைய கட்டடம், புதிய தளமாக மாறுகிறது. ஒரு படுக்கை அறை பெரிதாகிறது. சிலவற்றில் கூடுதலாக ஓர் அறை கட்ட வாய்ப்புண்டு. மாடுலர் கிச்சன் போன்ற நவீன வசதிகளைச் செய்து கொள்ளலாம். லிஃப்ட் இல்லாத பழைய தளங்கள் இடிக்கப்பட்டு, மின் தூக்கி வசதி இப்போது கிடைக்கும்.
ஒரு சின்ன கணக்குப் போடுங்கள். இதுபோன்ற குடியிருப்புகளில் குறைந்தபட்சம் ஒரு சதுர அடி ரூ.15000 இட அமைப்பைப் பொறுத்து, 100 சதுர அடி உள்ள ஓர் அறை கூடுதலாகக் கிடைத்தால், அது 15 லட்சம் ஆகிறது. வீட்டு வாடகை ரூ.25000 தந்தாலும் இரண்டு ஆண்டுக்கு (உச்சபட்சம்) ஆறு லட்சம்தான். ஆக, எப்படியும் உரிமையாளர் இந்தத் தன்மையினால் பயன் அடைகிறார் என்பது நிதர்சனம்.
ஒப்பந்தக்காரருக்கு என்னதான் லாபம்?
உதாரணமாக ஆறு தளங்கபள் உள்ள இடத்தில், புதிதாக எட்டு தளம் கட்டுகிறார். கார் நிறுத்தத்துக்கான இட அளவைக் குறைத்து, அதையும் குடியிருப்பாக மாற்றி விடுகிறார். இருக்கிற ஆறு பேருக்கு வெளிச்சுவர் ஓரமாக மேலே ஷீட் போட்டு வாகன நிறுத்த்துக்கு ஏற்பாடு செய்கிறார். அவருக்கு கிடைக்கும் இரண்டு தளங்களை அன்றைய நில மதிப்பில் விற்று விடுகிறார்.
இதுபோன்ற தன்மைகளில், உரிமையாளர்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் ஒத்த மனநிலை இருப்பது அவசியம். இடம், வசதி, நட்ட ஈடு (கிடைத்தால்) போன்ற பல அம்சங்களில் சிக்கல் எழுந்தால் எல்லாருமாக கூட்டு சேர்ந்து ஒப்பந்தக்காரர்களிடம் முறையிட்டு தீர்வு காணலாம்.