கடிகாரங்கள் ஆரம்ப காலகட்டத்தில் நேரம் பார்ப்பதற்காகப் பயன்பட்டன. இந்தக் காலத்தில் செல்பேசியில், தொலைக்காட்சியில் எனப் பல சாதனங்கள் மூலம் மணி பார்த்துக்கொள்ள முடியும். கைக்கடிகாரம் அணிவதுகூட இப்போது குறைந்துள்ளது. அந்த வகையில் வீட்டுக்குக் கடிகாரம் என்பது மணி பார்ப்பதற்கு என்பதைவிட, அழகுக்குதான் முக்கியமானதாக இருக்கிறது. வீட்டை அழகுபடுத்தும் கடிகாரங்களில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில:
சங்கிலிக் கடிகாரம்
இந்த வகைக் கடிகாரம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டது. அதாவது முற்களுக்குப் பதிலாக ஒரு சங்கிலி இருக்கும் சங்கியில் 1,2,3 என இலக்கங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவை மையத்துக்கு வருவதை வைத்து கடிகாரம் மணி காட்டும்.
லாங்கேஸ் கடிகாரம்
பழமையான சுவர்க் கடிகார வகை இது. ஒரு டயலுடன் இணைந்த இந்தக் கடிகாரம் பல அளவுகளில் கிடைக்கிறது. பெண்டுலத்துடனும் இருக்கும். இந்த வகைக் கடிகாரம் வீட்டின் மையத்தில் பொருத்துவதற்கு ஏற்றது.
அலமாரிக் கடிகாரம்
இந்த வகைக் கடிகாரம் 1750-ம் ஆண்டு பிரான்சில் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இந்த வகை மிகப் பிரபலமானதாக இருந்தது. அலமாரிகள், படுக்கையறை களுக்கு இந்த வகைக் கடிகாரங்கள் ஏற்றவை.
குயில் கடிகாரம்
இந்த வகைக் கடிகாரம் பெண்டுலத்துக்குப் பதிலகாக குயில் திறந்து கூவுவது போன்ற வடிவ அமைப்பைக் கொண்டது. இது கடிகாரம் வரவேற்பறையில் மாட்டுவதற்கு உகந்தது.
விளக்குக் கடிகாரம்
சுவர்களில் விளக்குப் பொருத்துவது போன்ற அமைப்பில் உள்ளதால் இந்தக் கடிகாரம் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த வகைக் கடிகாரத்தைச் சுவர் விளிம்புகளில், இரு அறைகள் சந்தித்துக்கொள்ளும் இடங்களில் மாட்டலாம்.
இருமுக கடிகாரம்
பெயர்ப் பலகை போன்ற அமைப்புடைய இந்தக் கடிகாரம் இரு பக்கமும் கடிகாரங்களை உடையது. இந்த வகைக் கடிகாரம் உணவகங்கள் போன்ற இடங்களில் மாட்டி வைக்கலாம்.