நாற்காலிகள் பயன்பாடு பல்லாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. பண்டைய கிரேக்கத்தில் முதன் முதலாக நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் முன்பு பிரபுக்கள், செல்வந்தர்கள் மட்டுமே நாற்காலிகளைப் பயன்படுத்தி வந்தனர். இன்று உலகம் முழுவதும் பரவலாக எல்லாத் தரப்பு மக்களும் நாற்காலிகளைப் பயன்படுத்துகிறார்கள். நாற்காலிகளில் பல வகைகள் இருக்கின்றன.
சாய்வு நாற்காலி
இதன் முதுகுப் பகுதி சாய்ந்து காணப்படும். வயோதிகர்கள் அமர்வதற்கு இந்த வகை நாற்காலி ஏற்புடையதாக இருக்கும். இந்த வகை நாற்காலிகள் முன்பு மரத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டது. இன்று இரும்பும், துணியும் கொண்டு உருவாக்கப்படுகிறது.
கிளிஸ்மாஸ் நாற்காலி
இது கிரேக்கத்தில் பயன்பாட்டில் இருந்த ஒரு நாற்காலி வகை. வளைவுகளுடன் கூடிய வடிவம் கொண்டது. இன்றைக்கு நவீன முறையில் மரம், இரும்பு, தோல் ஆகிய பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
சரிவு நாற்காலி
இந்த வகை நாற்காலி 16-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் முதுகுப் பகுதி சற்று உள் நோக்கிச் சரிந்திருக்கும். அதனால் உங்கள் முதுகெலுப்புக்குப் பாதுகாப்பும் சவுகர்யமும் தரும்.
ஸ்லிப் நாற்காலி
இந்த வகை நாற்காலிகள் கைகள் இல்லாமல் வடிவமைக்கப்படுகின்றன. ஆடை அலங்கார அறைக்கு ஏதுவான நாற்காலியாகக் கருதப்படுகிறது. படுக்கையறைக்கும் ஏற்றது.
கிளப் நாற்காலி
இந்த வகை நாற்காலி இங்கிலாந்தில் உள்ள ஜெண்டில்மேன் கிளப்பில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால்தான் இந்தப் பெயரும் வந்தது. கம்பீரமான கைகள் உள்ள வகை நாற்காலி மரமும் தோளும் கொண்டு உருவாக்கப்படுபவை. இப்போது துணியும் மரமும் கொண்டு உருவாக்கப்படுகிறது.