சொந்த வீடு

கை நாற்காலிகளின் கம்பீரம்

கனி

கை நாற்காலிகள் (Arm chairs) பெரிதாக இருப்பதால் வீட்டை அடைத்துக் கொண்டுவிடும் என்ற காரணத்தால் பெரும்பாலானவர்கள் அதை வாங்குவதற்குத் தயங்குவார்கள். ஆனால், இந்தக் கை நாற்காலிகள் வீட்டை மறுவடிவாக்கம் செய்ய நினைப்பவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். அத்துடன், வீட்டுக்குக் கம்பீரத் தோற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் கை நாற்காலிகளை எந்த விதத் தயக்கமுமின்றி வாங்கலாம். கை நாற்காலிகளில் இருக்கும் சில வகைள்:

‘தோல்’ நாற்காலி

வீட்டுக்குப் பாரம்பரியத் தோற்றத்தைக் கொடுக்க நினைப்பவர்கள் கை நாற்காலிகளில் ‘தோல்’ நாற்காலிகளைத் தேர்ந்தெடுக்கலாம். ‘தோல்’ மட்டுமல்லாமல் அதனுடன் மரமும் கலந்திருந்திருப்பது பாரம்பரியத் தோற்றத்தை மேலும் மேம்படுத்தும். இந்த நாற்காலியுடன் கால் வைக்கும் நாற்காலியும் இணைந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஓய்வெடுப்பதற்குப் பொருத்தமானதாக இருக்கும். இந்த நாற்காலி வாசிப்பு அறைக்கு ஏற்ற தேர்வு. இதன் விலை பத்தாயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

பூக்களால் ஒரு நாற்காலி

வீட்டுக்கு மகிழ்ச்சியான, பிரகாசமான தோற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ‘பூ வடிவ’ கை நாற்காலிகளை வாங்கலாம். வரவேற்பறையிலும், படுக்கையறை மூலையிலும் இந்த நாற்காலியை வைப்பது பொருத்தமாக இருக்கும். இந்த ஒரேயொரு நாற்காலியை வைத்து வீட்டின் தோற்றத்தைப் பெரிய அளவில் மாற்றிவிடலாம். இதன் விலை 13 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

பாரம்பரியம் பேசும் நாற்காலி

பாரம்பரியமான தோற்றத்தை விரும்புபவர்கள் மரத்தாலான கை நாற்காலியைத் தேர்ந்தெடுக்கலாம். முழுவதும் மர அறைக்கலன்கள் நிறைந்த ஓர் அறையில் வைப்பதற்கு இந்த நாற்காலி ஏற்றதாக இருக்கும். அத்துடன், சமகால அலங்காரத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் அறையிலும் இந்த நாற்காலி பொருந்திப்போகும். அடர் மர நிறத்தில் மென் நிற மெத்தையுடன் இருக்கும் கை நாற்காலியை வாங்கலாம். இது வீட்டுக்குப் பாரம்பரியம் கலந்த கம்பீரத் தோற்றத்தைக் கொடுக்கும். இதன் விலை பத்தாயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

தலை உயர நாற்காலிகள்

தலையைச் சாய்த்துவைத்துக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தலை உயர கை நாற்காலிகளை இப்போது பலரும் விரும்பிவாங்குகின்றனர். இரண்டுபுறமும் தலையைச் சாய்த்துவைத்துக்கொள்ளும்படியும் இந்த நாற்காலிகள் வடிவமைக்கப்படுகின்றன. வீட்டில் எந்த இடத்தில் வைத்தாலும் அந்த அறையை நேர்த்தியாக மாற்றிவிடும் தன்மை இந்த நாற்காலிகளுக்கு உண்டு.

எங்கும் புதுமை

புதுமையான வடிவமைப்பில் கிடைக்கும் கை நாற்காலிகளை பால்கனியிலும் தோட்டத்திலும் பயன்படுத்தலாம். வித்தியாசமான வடிவமைப்பில் இந்தக் கை நாற்காலி வெளிப்புற அலங்காரத்துக்கு ஏற்றவையாக இருக்கின்றன. இயற்கையைப் பறைசாற்றும் வண்ணங்களான நீலம், மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களில் இந்த நாற்காலிகளைத் தேர்ந்தெடுப்பது உகந்ததாக இருக்கும்.

SCROLL FOR NEXT