சொந்த வீடு

பெரியவர்களின் சிரமம் போக்கலாமே!

எஸ்.எஸ்.லெனின்

பொது இடங்களில் முதியவர்கள் புழங்குவதற்குப் போதிய வசதிகள் இல்லை என அங்கலாய்க்கும் நம்மில் பலர், சொந்த வீட்டில் அவர்களுக்கான வசதிகளைச் செய்து வைத்திருக்கிறோமா? சீனியர்களின் வசதிக்காக வீட்டை அடியோடு புரட்டிப்போட அவசியமில்லை. சற்றே அக்கறையும், முனைப்பும் இருந்தால் போதும், முதியவர்களுக்கான வீட்டைச் சீரமைத்துக்கொள்ளலாம்.

தனி வீடோ, அபார்ட்மென்டோ, முதியவர்களை மனதில் வைத்தும் சில மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம். முதியோருக்குப் பிரத்தியேக வசதிகள் இல்லாதிருப்பது, அவர்களுக்கு மட்டுமன்றி குடும்பத்தினர் அனைவருக்கும் சங்கடம் தரும். தற்போதைய சூழலில் பணியிலிருந்து ஓய்வுபெறும் தறுவாயில் கிடைக்கும் பணப் பயனைக் கொண்டு, தனி வீடுகளை வாங்கி தமது அந்திமத்தைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோர் அதிகரித்துவருகின்றனர்.

வங்கிகளின் ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்’ திட்டமும் இவர்களுக்கு வெகுவாகக் கைகொடுக்கிறது. இப்படி ஓய்வுக் காலத்தைத் தொடங்கும் முதியவர்கள், அதனை அர்த்தமுள்ளதாக்க இல்லத்தில் தங்களுக்கான பிரத்தியேக மாற்றங்களை முன்னதாகவே அமைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களும் தங்கள் இல்லத்து முதியவர்களை மனதில் வைத்துச் சில மாற்றங்களை ஏற்படுத்துவதும் அவசியம்.

சீரமைப்பும் வடிவமைப்பும்

சொந்த வீட்டுக்குத் திட்டமிடும்போதே அதன் வடிவமைப்பில் முதுமையை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டு வசதிகளைத் திட்டமிடுவது உத்தமம். இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து வீட்டை வேண்டிய வகையில் சீரமைத்துக்கொள்ளலாம் என்பது செலவைக் கூட்டும். எனவே வடிவமைப்பின்போதே தரை, படிகள், சாய்தளம் என அவசியமானவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். பின்னாளில் இதை அடிப்படையாகக் கொண்டு அப்போதைய நவீன வசதிகளையும் பொருத்திக்கொள்ளலாம்.

கூடுதல் படுக்கையறை கொண்ட வீடுகளில், ஒரு படுக்கையறையை முற்றிலும் முதியவர்களை மனதில் கொண்டு வடிவமைப்பது சிறப்பு. உடல் நலமின்மை, ஓய்வுத் தருணம் ஆகியவற்றின்போது நாம் அனைவருமே முதியோருக்கான நிலையை எட்டுவதால், மேற்படி ஏற்பாடுகள் வீட்டார் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும்.

ஏற்கெனவே கட்டிய வீடெனில், அதில் முதியவர்கள் அதிகம் இயங்கும் இடங்களில் தேவையான சீரமைப்புகளை முதலில் திட்டமிடலாம். படுக்கையறை, குளியலறை, வாசலுக்கான நடைபாதை இவைதான் முதியவர்கள் அதிகம் நடமாடும் இடங்கள். இங்குள்ள தேவையற்ற பொருட்களைப் பிறிதோர் இடத்திற்கோ பண்டக அறைக்கோ மாற்றிவிடலாம். அடுத்ததாக முதியோருக்கு ஏற்ற வகையில் தரைத் தளத்தையும் வழுக்காத வகையில் அமைப்பது நல்லது. அவை இயலாது போனாலும் குளியலறை, படுக்கையறை, வாசல் ஆகியவற்றை இணைக்கும் பாதைகளையேனும் சொரசொரப்பான தளமாக மாற்றி அமைக்கலாம்.

குளியலறை

முதியோரை மனதில் வைத்து வீட்டில் சீரமைப்புகள் செய்வதில் முதலிடத்தில் இருப்பது குளியலறை மற்றும் கழிவறை. முதியோர்கள் வீட்டினுள் எதிர்கொள்ளும் விபத்துகளில் பெரும்பாலானவை இங்குதான் ஏற்படுகின்றன. தரை சொரசொரப்பாக அமைவதோடு, தேவையான இடங்களில் கைப்பிடிகள், அமர்ந்து குளிப்பதற்கான மேடை ஆகியவை அமைக்கப்பட வேண்டும்.

படுக்கையறை

ஓய்வுக்காவும் உறக்கத்திற்காகவும் முதியவர்கள் அதிக நேரம் செலவிடும் இந்த அறையில் கூடுதல் ஏற்பாடுகள் தேவை. முதுகைச் சாய்த்து அமரும் வகையில் மாற்றியமைத்துக் கொள்வதான கட்டில், அதனருகிலேயே கைக்கெட்டும் இடத்தில் மின் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் ஸ்விட்சுகள் அமைக்க வேண்டும். மருந்து மாத்திரை, கண்ணாடி, டிவி ரிமோட் என அத்தியாவசியப் பொருட்களுக்கான அமைவிடங்களையும் இதனை ஒட்டியே தீர்மானிக்கலாம். படுக்கை மட்டுமன்றி அமரும் இருக்கை அருகிலேயும் இந்த வசதிகள் அவசியம். போதுமான இயற்கை வெளிச்சமும் காற்றோட்டமும் இருப்பது நல்லது. படுக்கையறை-குளியலறை பாதையில் எப்போதும் பளிச்சென்று வெளிச்சம் இருக்குமாறு விளக்குகள் பொருத்துவது அவசியம்.

பாதுகாப்பு மற்றும் உதவிகள்

தனி வீடானாலும், அபார்ட்மென்டானாலும் தனியே வசிக்கும் முதியோர்களைப் பொறுத்தவரை பாதுகாப்பிற்கான அம்சங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட வேண்டும். சிசிடிவி, இன்டர்காம், அவரச உதவிக்கான அழைப்பான்கள், தீயணைப்பான் ஆகிய ஏற்பாடுகளைச் செய்வதோடு, அவற்றுக்குத் தேவையான மறைவான மின் சுற்றுகளுக்கு வீட்டின் வடிவமைப்பின்போதே திட்டமிடுவது நல்லது.

வீட்டின் அழைப்பு மணி ஒலிப்பின்போதே தனி நிறத்தில் எரியும் விளக்கைப் பொருத்துவது, செவித்திறன் குறைபாடுள்ள முதியோருக்கு உதவியாக இருக்கும். மின்தடைக்கு வாய்ப்பு தராத இன்வெர்டர் ஏற்பாடுகள் அவசியம். அபார்ட்மென்ட் எனில் லிஃப்ட் இயக்கத்திற்கான தனி மின்வசதி உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்வதும் அவசியம். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளின் பட்டியலை பில்டர்களிடம் முன்கூட்டியே அளித்துவிடுவது நல்லது. பின்னாளில் வீட்டைச் சீரமைக்க முயல்வது கூடுதல் செலவோடு, வீட்டின் பொலிவையும் சிதைப்பதாக அமையக்கூடும்.

பிற ஏற்பாடுகள்

வீட்டினுள் முதியோர் அதிகம் புழங்கும் இடங்களில், படிகளை முடிந்தவரை தவிர்க்கலாம். படிகள் தவிர்க்க முடியாத இடங்களில் படிகளின் உயரத்தைக் குறைத்தும் அகலத்தை அதிகமாக்கியும் இருபுறமும் கைப்பிடிகளுடன் அமைக்கலாம். அதிக எண்ணிக்கையிலான படிகளைக் கடப்பதற்கு என பிரத்தியேக லிப்டுகள் கிடைக்கின்றன. தள்ளாமை, மூட்டு வலியால் அவதிப்படுவோர் இந்த வசதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

வயது முதிர்ந்தவர்கள் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஆபத்தானது. அவர்களை மனதில் வைத்து வீட்டின் தோட்டத்திலோ வீட்டைச் சுற்றியோ நடைபாதை அமைப்பது பாதுகாப்பானதாக அமையும். சின்னச் சின்ன மாற்றங்கள் என்றபோதும், அவை வயதானவர்களுக்கு தரும் பாதுகாப்பும், நம்பிக்கையும் அலாதியானவை.

SCROLL FOR NEXT