குழந்தைகளே வீட்டின் உண்மையான உரிமையாளர்கள். அவர்களே பெரியவர்களின் விலை மதிக்க முடியாத சொத்து. பெரியவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வீட்டை வாங்குவதே குழந்தைகளின் சந்தோஷத்துக்காகத்தான்; அவர்களின் எதிர்கால வாழ்வுக்காகத தான்.
அதே வேளையில் வீட்டைக் கலகலப்பாக்குபவர்கள் குழந்தைகள். அவர்களின் சிரிப்புச் சத்தமும் துள்ளலோட்டமும் வீட்டைப் புத்துணர்வுடன் இருக்கச் செய்யும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்காகவே ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அறையை ஒதுக்குவது அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தும். அந்த அறையில் அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களால் அதை நிறைத்து அழகுபடுத்தலாம். இயல்பாகவே குழந்தைகளுக்கு வண்ணங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே குழந்தைகளின் அறையை வசீகர வண்ணங்கள் பூசி மெருகேற்றலாம்.
அந்த அறையில் வெறுமனே ஒரு வண்ணத்தைப் பூசுவதைவிட, அறையின் சுவரில் பசுங்கொடிகள், செடிகள், பூக்கள் ஆகியவற்றை வரைந்து அழகான தோற்றம் தரலாம். சில குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வமிருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டில் குழந்தைகளின் அறையை அழகிய ஓவியங்களால் நிறைக்கலாம். அறையின் சுவரில் அழகான ஓவியங்களை வரைந்துவிடலாம். இல்லையெனில் வசீகர ஓவியங்களை மாட்டி அழகூட்டலாம்.
தினந்தோறும் அறைகளில் எதிர்ப்படும் அருமையான ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் குழந்தைகளின் படைப்புத் திறன் வளரும். குழந்தைகளுக்கான அறையின் சுவர்களை அலங்காரப்படுத்துவதில் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் வைக்க வேண்டும். குழந்தைகளுக்குப் புதிது புதிதான விஷயங்கள் மீதே நாட்டம் இருக்கும். ஆகவே அவர்களின் அறையில் அடிக்கடி மாற்றும் வகையிலான பூச்சையே மேற்கொள்ள வேண்டும். வீட்டின் பிற அறைகளைப் போல் ஒரே பூச்சு என்பது அவர்களுக்கு அலுப்பூட்டி விடும். சிரமத்தைப் பாராது இதைப் பராமரித்தால் குழந்தைகளின் மனம் பூரிப்படையும்.
அவர்களது பிற செயல்பாடுகளிலும் ஆரோக்கியமான முன்னேற்றம் தென்படும். குழந்தைகளின் அறையில் போடப்படும் அறைக்கலன்களிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அவையும் வசீகரமானதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வடிவம், நிறம் கொண்டவையாக அவை அமைய வேண்டும். குழந்தைகள் பள்ளிப் பாடங்களை செய்வதற்குரிய மேசை நாற்காலி போன்றவையும் பிரத்தியேகமாக வடிவமைத்துப் போடலாம்.
கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் அறைக்கலன்களைவிட பிரத்தியேகமாக வடிவமைக்கும் போது, ஒரு தனித்துவம் கிடைத்துவிடும். அதுவே குழந்தைகளைக் குதூகலப்படுத்தும். குழந்தைகளின் மகிழ்ச்சியே வீட்டின் மகிழ்ச்சி என்பதை மறந்துவிடாதீர்கள்.