சொந்த வீடு

வீட்டுக் கடனுக்கான வட்டி குறையுமா?

மிது கார்த்தி

ரெப்போ ரேட் எனப்படும் வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநகராக உர்ஜி படேல் கடந்த மாதம் பொறுப்பேற்ற பிறகு எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இது. ரெப்போ ரேட் குறைந்தால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்ற நம்பிக்கையில் வீட்டுக் கடன்களை வாங்கியோர் காத்திருக்கிறார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையுமா?

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜித் படேல் பொறுப்பேற்ற பிறகு முதல் நிதி மற்றும் கடன் கொள்கை ஆய்வுக் குழு கூட்டம் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்றது. வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது சம்பந்தமாக நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீண்ட ஆலோசனைகள் பெறப்பட்டன. இறுதியாக வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன் விகிதத்தில் கால் சதவீதம் அதாவது 0.25 சதவீதம் குறைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி ரெப்போ ரேட் விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வட்டி விகிதம் நிர்ணயிக்கும் குழுவில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பாக, பிரதிநிதிகள் பங்கேற்று, நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழலைக் கருத்தில்கொண்டு, வட்டிவிகிதத்தைக் கால் சதவீதம் வரை குறைக்க ஒப்புதல் அளித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது, நிதி மற்றும் கடன் கொள்கைகளில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. அப்போது பணவீக்கம் சற்று அதிகரிக்கும் நிலையில் இருந்தது. அதனால், கடன் கொள்கைகளில் மாறுதல் செய்ய முடியாமல் போனதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தார்கள். இப்போது எப்படிக் குறைத்தார்கள்?

இதுபற்றி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஓய்வுபெற்ற துணைப் பொதுமேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “கடந்த முறை சற்று அதிகரித்திருந்த பணவீக்கம் தற்போது ஒரே சீராகக் கட்டுக்குள் இருக்கிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாகவே உள்ளது. அடுத்து, நாட்டில் சராசரியாகப் பெய்யும் பருவ மழை கடந்த சில மாதங்களில் சரியாகப் பெய்திருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் புதிய நிதி மற்றும் கடன் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் ரெப்போ ரேட் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது” என்று காரணங்களைக் கூறினார்.

வழக்கமாக ரெப்போ ரேட் குறைந்தால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட சில்லறைக் கடன்கள் குறையும். இப்போதும் அந்தக் கேள்வி எழுந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 1.25 சதவீதம் வரை ரெப்போ ரெட் குறைந்தபோதும் சில வங்கிகள் மட்டுமே வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தன. அப்போது ஆளுநகராக இருந்த ரகுராம் ராஜன் இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் செய்தார். புதிய ஆளுநர் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த முறையாவது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையுமா?

“ரெப்போ ரேட் குறைப்பின் மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட சில்லறைக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கக்கூடும். அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன” என்று தெரிவித்தார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் சிறிதளவு குறைந்தாலும், தவணைத் தொகையில் சில நூறு ரூபாய்கள் குறையும். கடன் வாங்கியவர்களுக்கு உள்ள நிதி சுமையை இது கொஞ்சமாவது குறைக்கும். வீட்டுக் கடன் குறையுமா? கொஞ்சம் பொறுத்திருந்தால் தெரிந்துவிடும்.

SCROLL FOR NEXT