இனிய இல்லத்தை அழகுற கட்டி எழுப்பிய பின்னர் அதில் குடியேறுவதற்காக சில வசதிகளை நாம் மேற்கொள்கிறோம். அவற்றில் ஒன்று அறைக்கலன்கள். அதிலும் வரவேற்பறையில் நமது கவனம் முழுக்க அங்கு போடப்படும் இருக்கைகளின் மீதே அமையும். பெரும்பாலும் இப்போதெல்லாம் வரவேற்பறையை ஆக்கிரமிப்பவை சோபாக்கள்தான். முன்னரெல்லாம் மரத்தாலான அறைக்கலன்களும் மூங்கில் அறைக்கலன்களும் அலங்கரித்த இடத்தை நவீன காலத்தில் சோபாக்கள் ஆக்கிரமித்துவிட்டன. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சோபாக்கள் என்பவை அந்தஸ்தின் அடையாளமாகிவிட்டன.
பெரிய ஹாலில் கம்பீரமான சோபா ஒன்றை வாங்கிப்போடும்போது அந்த அறையின் தோற்றப்பொலிவு அதிகரித்துவிடுகிறது என்றே உள் அலங்கார நிபுணர்கள் கூறுகிறார்கள். அத்தகைய சோபாக்கள் ஏற்படும் நன்மை தீமை, அவை நமக்கு அவசியமா அவசியமில்லையா நமது பொருளாதார நிலைமை சோபாக்களை வாங்குவதற்கு ஒத்துழைக்குமா ஒத்துழைக்காதா என்ற பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் ஒரு சோபாவை வாங்க முடிகிறது. முற்றிலும் பழமையில் ஊறிய மனம் சோபாக்களை எடுத்த எடுப்பிலேயே உதறிவிடும். ஆனால் சிறிது நவீனம் பக்கத்தில் சாய்பவர்களால் அப்படி ஒரேயடியாக சோபாக்களை உதவிட முடியாது என்பதே யதார்த்தம்.
சந்தையில் விதவிதமான சோபாக்கள் கிடைக்கின்றன. லட்சக்கணக்கான ரூபாயைச் செலவழித்து ஒரே சோபாவை நீங்கள் வாங்கிவிட முடியும். சில ஆயிரங்களுக்குள்தான் உங்களால் செலவழிக்க இயலும் என்றாலும் அதற்கேற்ற வகையிலும் சோபாக்கள் கிடைக்கின்றன. பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் உள் அலங்காரம், மாடுலர் கிச்சன் போன்ற பணிகளை மேற்கொள்ளும்போதே ஹாலுக்கான சோபாவையும் அழகுற அமைக்கும் போக்கும் காணப்படுகிறது. உங்கள் அறைக்கேற்ற விதத்தில் அதன் நீள அகலங்களுக்கு ஏற்ப, உங்களுக்கு என்னென்ன வசதி தேவையோ அவற்றுக்கும் ஏற்ப சோபாக்களை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் எல்லாம் இப்போது வந்துவிட்டன.
பகலிலே ஆற அமர்ந்து ஓய்வெடுக்கும் அதே சோபாக்களில் இரவிலே நீங்கள் படுத்து கண்ணயரலாம். ஒரே நேரத்தில் பலர் அமர்ந்து கொள்ள வழிசெய்து கொடுக்கும் சோபாக்கள். சௌகரியமாக அமர இவை உதவும். எத்தகைய வசதி தேவையோ அத்தகைய வசதிகளுடன் சோபாக்களை வாங்கிவிட்டால் கால் நீட்டிக்கூட அமரலாம். சில மென்மையான சோபாக்கள் அப்படியே நம்மை உள் வாங்கிக்கொள்ளும். கடல் நுரையில் அமர்வது போன்ற, காற்றின் மீது மிதப்பது போன்ற உணர்வுகளை அவை தரும்.
பழைய காலத்தில் சோபா கம் பெட் என்ற பெயரில் நீளமான ஒரு சோபாவை வாங்கிப்போடுவோம். இரவில் அதன் சாயும் பக்கத்தை விரித்தால் அது கட்டிலாகிவிடும். இது தான் அப்போது கிடைத்த வசதி. இப்போதெல்லாம் அநேக வகைகள் வந்துவிட்டன. பல துண்டுகளைக் கொண்ட பெரிய பெரிய சோபாக்கள் கிடைக்கின்றன. இவற்றை நீங்கள் எளிதாகக் கையாளலாம். தனித் தனியான பாகங்களாக இருப்பதால் ஒவ்வொன்றையும் நகர்த்தி அறையைச் சுத்தப்படுத்திக்கொள்ளலாம்.
கம்பீரமான மர நாற்காலிகள் காணப்படும் அலங்கார டிசைன்களைப் போலவே டிசைன்களைக் கொண்ட சோபாக்கள் கிடைக்கின்றன. நமது நவீன சோபாக்கள் மிகவும் அகலமானவை. அமரும் இடம் மிகவும் விசாலமானதாக இருப்பதால் அதில் அமர்வதே சொகுசாக இருக்கும். விசாலத்துக்கு ஏற்ற வகையில் முதுகைச் சாய்க்க மென்மையான குஷன்களும் அவற்றில் இருக்கின்றன. அவற்றை வாகாக முதுகின் பின்னே வைத்துக்கொண்டு ஹாயாக சோபாக்களில் அமர்ந்துகொண்டு டிவி பார்த்தே பொழுதை ஓட்டிவிடலாம்.
வீட்டைக் கட்டி முடித்து அதில் ஒரு சோபாவை வாங்கிப் போடும் முன்பு அந்த அறையின் வண்ணம் அந்த அறையில் எங்கே சோபாவை போடப் போகிறீர்கள் போன்ற விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் பட்ஜெட்டுக்கேற்ற சோபாவை வாங்கிப்போட்டு வருபவர்களை அசத்துங்கள். சோபாக்கள் விஷயத்தில் ஒரே விஷயம் பராமரிப்பு. முறையாகப் பராமரிக்காவிட்டால் அறையின் அழகு கெடுவதுடன் நமது ஆரோக்கியத்துக்கும் அது கேடாக முடிந்துவிடும். ஆகவே கம்பீரமான சோபா வாங்கிப் போடுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அதைக் கவனத்துடன் சுத்தப்படுத்துவதும்.