கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ‘தி பில்ட் எகோ எக்ஸ்போ’வில் (Build Eco Xpo) பசுமைக் கட்டிடங்களை அமைப்பதற்கான பல புதுமையான வழிகள் காட்சிப்படுத்தப்பட்டன. சென்ற வாரம் நான்கு புதுமையான வழிகளைப் பார்த்தோம். இந்த வாரம் எஞ்சிய வழிகளைப் பார்ப்போமா?
மூலிகை அறிவியல்
மூலிகை அறிவியல் (Herb Science) என்ற தயாரிப்பை வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான பள்ளியான என்ஜி அன்ட் பாலிடெக்னிக் மாணவர்கள் தயாரித்திருக்கிறார்கள். வேதியியல் சோதனைகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ‘மூலிகை அறிவியலை’ நவீன நகர்ப்புறத் தோட்ட கருவிப்பெட்டி என்று சொல்லலாம். நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு புதுமையான தோட்ட அனுபவத்தைக் கொடுப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது குடும்ப உறுப்பினர்களுக்குத் தோட்டக் கலையின் மீது ஆர்வம் ஏற்படுத்தவும் செய்யும். இதில் விதவிதமான சோதனைக் குழாய்கள், தோட்டக் கருவிகளாக இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தத் தோட்டக் கருவிப்பெட்டியில் ‘இன்ட்ராக்டிவ்’எனும் வழிகாட்டியும் கொடுத்திருக்கின்றனர்.
நன்மைகள்: கையடக்கமானது, தோட்டக்கலையை ஊக்குவிக்கிறது.
மர பிளாஸ்டிக் (Cellwood)
சிங்கப்பூரைச் சேர்ந்த ‘மைக்ரோசெல்’ என்ற நிறுவனம் 2008-ம் ஆண்டு இந்தத் தயாரிப்புக்குக் காப்புரிமை வாங்கியது. இது சூழலுக்கு ஏற்ற தயாரிப்பு. மரத்துக்காகக் காடுகள் அழிக்கப்படுவதைக் குறைக்கும் வகையில் செல் அவுட் முறை உதவுகிறது. எப்படி? செல் அவுட் என்பது மரமும் பிளாஸ்டிக்கும் கலந்த கலவை (wood plastic composite). இதை மரத்துக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
இதை ‘ஃபோமிங்’, ‘ஹாட் - பிரஸ்ஸிங்’ முறையைப் பயன்படுத்தித் தயாரிக்கின்றனர். இதில் உறுதியையும் கடினத் தன்மையையும் சேர்க்கக் கண்ணாடி இழை அடுக்குகளையும் சேர்த்திருக்கின்றனர். இந்த ‘செல்வுட்’ நச்சுத்தன்மையில்லாமலும், அதிகமான உலோகக் கலப்பு இல்லாமலும், ஃபார்மால்டிஹைடு சேர்க்கப்படாமலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முழுமையாக மறுசுழற்சி, மறுபயன்பாடு இரண்டுக்கும் பயன்படும்படி இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு மரம் போன்ற தோற்றத்திலே இருக்கும் ‘செல்வுட்’ கட்டுமானப் பொருளாகவும், தரைத்தளம் அமைக்கவும் பயன்படும்.
நன்மைகள்:
நச்சுத்தன்மையில்லை, நீர்புகாத் தன்மையுடையது, மறுசுழற்சி செய்யலாம்.
வைரஸ் தடுப்பு பெயிண்ட்
நிப்பானின் தயாரிப்பு இது. ‘தி வைரஸ்கார்டு’ மற்றும் ‘சில்வர் ஐயர்ன்’ தொழில்நுட்பத்தின் உதவியுடன் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தடுப்பானாக இந்த வைரஸ் தடுப்பு பெயிண்ட் (Anti virus paint) செயல்படுகிறது. இது பாதுகாப்பு அம்சத்துடனும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், எளிமையாகக் கறை அகற்றும் பண்புகளுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பெயிண்டை வீட்டின் உட்புற அலங்காரத்துக்காகவும், உள்கட்டுமானப் பகுதிகளான சிமெண்ட், சுவர்கள், செங்கல் வேலைப்பாடுகள் போன்றவற்றைப் பாதுகாக்கவும் பயன்படுத்தலாம். குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளி, மருத்துவமனைகள் போன்ற இடங்களில் இதைப் பயன்படுத்தலாம்.
நன்மைகள்: வைரஸ் தடுப்பான், எளிமையாகச் சுத்தப்படுத்தலாம்
காற்று மாசு நீக்கி
சிறப்புத் தாவரங்களையும், நுண்ணுயிர்களையும் பயன்படுத்தி, காற்றில் இருக்கும் அசுத்தங்களை அகற்றும் புதிய வகைதான் இந்த ‘பொட்டானிகைர்’(Botanicaire). இது காற்று மாசுநீக்கி. வீடுகளிலும், அலுவலகங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். சிங்கப்பூரைச் சேர்ந்த ‘இன்-வைட்ரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த மாசுநீக்கியில் ‘நுவோக் நுண்ணுயிர்கள்’எனப்படும் சிறப்பு பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில், உட்புறத்தில் இருக்கும் காற்று மாசுக்களை 99 சதவீதம் நீக்கும்படி இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தூசு, துர்நாற்றத்தை நீக்குவதோடு விஷ வாயுக்களையும்கூட நீக்குகிறது.
நன்மைகள்: தூசியை வடிகட்டுதல், இயற்கையான காற்று மாசுநீக்கி.
தமிழில்: என். கௌரி © தி இந்து (ஆங்கிலம்)