சிமெண்ட் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பத்தாண்டுக்கு முன்பு வரை சிமெண்ட் விலை ஒரே சீரான விகிதத்தில்தான் இருந்துவந்தது. 2007-ம் ஆண்டு வரை சிமெண்ட் விலை சுமார் ரூ. 180-க்கு விற்பனை செய்யப்பட்டது. பிறகு அது ஒவ்வொரு ஆண்டுக்கும் அதிகரித்து 2011-2012-ல் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ. 260 ஆனது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் சிமெண்ட் விலை ரூ. 280ஐத் தொட்டது. ஆனால் செம்படம்பர் மாத இறுதி வாரத்தில் சிமெண்ட் விலை திடீரென 280 ரூபாயில் இருந்து 50 ரூபாய் உயர்ந்து ரூ. 330 என சிமெண்ட் விலை விண்ணை முட்டியது.
இந்நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் ஓரளவு விலை கட்டுக்குள் வந்தது. இந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிமெண்ட் விலை ரூ. 300 ஆக இருந்தது (தகவல்: அகில இந்தியக் கட்டுமானர் சங்கம், தென்னக மையம்). ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை. கடந்த வாரத்தில் இருந்து சிமெண்ட் விலை மீண்டும் ஏறுமுகம் கண்டது. அகில இந்தியக் கட்டுமானர் சங்கத்தின் தென்னக மையத்தின் தகவலின்படி இந்த வாரம் (25.06.2014) சிமெண்ட் விலை ரூ. 350ஐத் தொட்டுள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர் சங்கக் கூட்டமைப்பின் சென்னைப் பிரிவு தலைவர் அஜித் சோர்டியா இந்த சிமெண்ட் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த சிமெண்ட் விலை உயர்வு, நியாயமானது அல்ல எனக் கண்டித்துள்ளார். மேலும், “சிமெண்ட் விலை உயர்வுக்கு சரியான காரணம் எதுவும் இல்லை. இந்த விலை உயர்வு ஆதாரமற்றது” எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சிமெண்ட் விலை உயர்வால் தென்னிந்தியக் கட்டுமானத் தொழில் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் நிலவுகிறது. இதனால் பல லட்சம் கோடி அளவிலான தென்னிந்தியக் கட்டுமானத் தொழில், நாட்டுக்குப் பொருளாதார ரீதியிலான பாதிப்பை விளைவிக்கும். இது மட்டுமல்லாது தமிழ்நாட்டின் சிறு நகரங்களிலும் கட்டுமானத் தொழில் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த விலை உயர்வு கட்டுக்குள் வராத பட்சத்தில் கட்டிடப் பணிகளுக்காக கட்டுமான நிறுவனங்கள் விதித்துள்ள கட்டணம் பல மடங்கு உயரும் அபாயமும் உள்ளது.
சிமெண்ட் விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரும் வரை ஜூன் 30 வரை சிமெண்ட் கொள்முதலை கட்டுமான நிறுவனங்கள் நிறுத்திவைப்பதாக அஜித் சோர்டியா அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்திற்கும் பலன் கிடைக்காதபட்சத்தில் ஜூலை 7-ம் தேதி முதல் தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தனியார் கட்டுமானப் பணிகள் மட்டுமல்லாது அரசுக் கட்டுமானப் பணிகளும் பாதிக் கப்படும் வாய்ப்புள்ளது. உதாரணமாகச் சென்னை நகரின் மையப் பகுதியில் மேற் கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள் கோரி வருகின்றன.