உலகளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நகரங்கள் பட்டியலை, சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது global prime sector எனப்படும் Candy GPS நிறுவனம்.
இந்தப் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்றே ஒன்றுதான் இடம் பெற்றிருக்கிறது. அது தலைநகரமான டெல்லி அல்லது இந்தியாவின் கேட்வே எனப்படும் மும்பை அல்லது தகவல் தொழில்நுட்பத்துறை நகரமான பெங்களூரு என நீங்கள் நினைத்திருந்தால் சரியான யூகமல்ல... தமிழகத்தின் கலாசார நுழைவாயில் என்றழைக்கப்படும் சென்னைதான் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நகரம்.
சென்னையில், ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் காரணிகள் குறித்து Candy GPS வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளவற்றைப் பார்ப்பதற்கு முன்பாக, அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள நகரங்களை முதலில் பார்த்து விடலாம்....
1டெல் அவிவ்இஸ்ரேல்2மெல்பர்ன்ஆஸ்திரேலியா3மியாமிஅமெரிக்கா4டப்ளின்அயர்லாந்து5பனாமா சிட்டிபனாமா6பெய்ரூட்லெபனான்7இஸ்தான்புல்துருக்கி8கேப் டவுன்தென்னாப்ரிக்கா9ஜகர்த்தாஇந்தோனேஷியா10சென்னைஇந்தியாசென்னை நகரம் இந்த அறிக்கையில் இடம்பெறுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் பற்றியும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல நூறு ஆண்டு வரலாற்றைக் கொண்ட நகரங்களில் சென்னைக்கு முக்கிய இடம் உள்ளதாகவும், கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நகரமாக சென்னை உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய பூங்கா அமைந்திருப்பது, ஆசிய அளவில் புகழ்பெற்ற அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் போன்றவை அருகில் இருப்பதும் சென்னையின் பெருமைக்கு வளமை சேர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விஷயங்கள் பற்றி ரியல் எஸ்டேட் துறையினரிடம் கேட்ட போது, சென்னை எப்போதுமே ரியல் எஸ்டேட் துறைக்குக் கை கொடுக்கும் நகரமாகவே இருந்து வருகிறது என்று மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பல நூறு குடியிருப்புகளைக் கொண்ட கட்டுமானத் திட்டங்கள் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் சென்னைக்கு அறிமுகமாயின. ஆனால், நில விற்பனை சுமார் 50 ஆண்டுகளாக பெரிய ஏற்ற, இறக்கமின்றி நடைபெற்று வருவதையும் அவர்கள் குறிப்பிட்டனர். அதாவது, அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் வருகை, சென்னை ரியல் எஸ்டேட் துறைக்குக் கூடுதலாக வலுசேர்த்திருக்கிறது என்பதில் இருவேறு கருத்து இல்லை.
சென்னை நகரின் முக்கிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விலை உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் கூட, விளம்பரம் செய்த உடனேயே சில இடங்களில் விற்றுத் தீர்ந்து விடுகின்றன என்றும் ரியல் எஸ்டேட் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, காலி மனை விற்பனையாகட்டும், அடுக்கு மாடிக் குடியிருப்பு விற்பனையாகட்டும், இரண்டுக்குமே கை கொடுக்கும் நகரமாக சென்னை விளங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி, பல வளர்ந்த நாடுகளின் முன்னேற்றத்தையும் பின்னடையச் செய்தது. அதன் தாக்கம் இந்தியாவையும் பாதித்த போது, சென்னை ரியல் எஸ்டேட் துறையும் சற்றே மந்தகதியில் இயங்கியது. எனினும், அப்போதும் கூட சென்னையில் குறிப்பிடத்தக்க அளவு ரியல் எஸ்டேட் துறையில் விற்பனை இருந்ததைப் பல முன்னணி ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களும் தற்போது நினைவுபடுத்துகின்றனர்.
தற்போதைய சூழலில் வசதி படைத்தவர்கள் சென்னை நகரின் மையப் பகுதியிலும், எல்லைப் பகுதிகளிலும் நிலம் அல்லது வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் நடுத்தர மற்றும் மாத சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர், சென்னை புறநகர்ப் பகுதிகளில் வீட்டு மனை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், ஏழு முதல் 10 லட்சத்திற்கு உள்ளாக முதலீடு செய்ய விரும்புபவர்களின் தேர்வு அச்சிரப்பாக்கம், வாலாஜாபாத் ஆகிய இடங்கள் என ரியல் எஸ்டேட் துறையினர் குறிப்பிடுகின்றனர். இதே போல் 12 லட்சம் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்ய விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் ஒரகடம், சுங்குவார் சாத்திரம், பெரும்புதூர் ஆகிய இடங்களில் மனை வாங்க விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகளுடன் கூடிய காலி மனைகளுக்குப் பற்றாக்குறை நிலவுவது, வயல்களை வீட்டு மனைகளாக மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் கால தாமதம் ஆகியவை வீட்டு மனைகளுக்கான தேவையை அதிகரிக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை மையப்படுத்தி, மாநில அரசும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இணையதளங்கள் மூலம் நில வழிகாட்டி மதிப்பை மட்டுமின்றி பத்திரப் பதிவு தொடர்பான தகவல்களையும் மின்னணு முறைக்கு மாற்றியுள்ளது.
அதன் காரணமாக, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நிலம் வாங்குபவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவிக்கின்றனர். விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், DTCP போன்ற அரசு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளை வாங்குவதிலும், அரசு அங்கீகாரம் பெற வீடுகளை வாங்குவதிலும் கவனம் செலுத்துகின்றனர்.
இதுமட்டுமின்றி, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் 40 ஆயிரம் டாலருக்கு, அதாவது இன்றைய நிலையில் சுமார் 23 லட்சம் முதல் 24 லட்சம் ரூபாயில் இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகள் கிடைப்பதாகவும் Candy GPS நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சர்வதேச நகரங்கள் பட்டியலில் சென்னையில் தான் மிகக் குறைவான விலையில் வீடுகள் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாக கருதப்படுகிறது. எனவே, உலகின் பிற முன்னணி நகரங்களை விட விலை குறைவாக இருப்பதால், சென்னையில் அடுத்த 5 ஆண்டுகள் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்குப் பெருமளவு வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.