சொந்த வீடு

ஒளியுடன் ஒரு கொண்டாட்டம்!

கனி

இனி வரப்போகும் நாட்களில் வரிசையாக விழாக்காலக் கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன. இந்த விழாக்காலத்தில் வீட்டைப் புதுப்பொலிவுடன் மாற்ற வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். அப்படி வீட்டை அலங்கரிக்க நினைப்பவர்களுக்குச் சில ஆலோசனைகள்...

வண்ணங்களின் அட்டகாசம்

விழாக்களுக்கு ஏற்ற வண்ணக் கலவையாகத் தங்க நிறமும் சிவப்பு நிறமும் இருக்கும். இதில் தங்க நிறத்தைச் சுவர்களுக்கு மட்டுமல்லாமல் சாப்பாட்டு மேசை, கலைப்பொருட்கள், ஒளிப்படச் சட்டகங்கள் போன்றவற்றுக்குத் தேர்ந்தெடுக்கலாம். இந்த இரண்டு வண்ணங்களுடன் மஞ்சளையும் ஆரஞ்சையும் இணைத்துக்கொள்ளலாம். இந்த வண்ணங்கள் எல்லாம் செழிப்பு, ஆடம்பரம், வெற்றி, பரிபூரணம் போன்றவற்றைக் குறிப்பதனால் விழாக் காலங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

இந்தப் பாரம்பரியமான வண்ணங்களுடன் பித்தளை, செம்பு, உலோகம், மரம், கண்ணாடி போன்றவற்றால் வடிவமைக்கப்பட்ட பொருட்களையும் இணைத்துக் கொண்டால் அது வீட்டுக்கு உடனடியான விழாக் காலத் தோற்றத்தைக் கொடுக்கும்.

ஒளியின் அர்த்தங்கள்

விளக்குகளின் ஒளியில்லாத விழாக்கள் இருக்கவே முடியாது. இந்த விழாக்களுக்கு விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது கூடுமானவரை மண் விளக்குகளையே தேர்ந்தெடுப்பது நல்லது. நேரமிருந்தால் இந்த மண் விளக்குகளைப் பிரகாசமான வண்ணங்களால் உங்கள் கையாலேயே வடிவமைக்கலாம். அப்படியில்லாவிட்டால், கடைகளில் அலங்கரிக்கப்பட்ட மண் விளக்குகளை வாங்கி வீட்டை அலங்கரிக்கலாம்.

பாரம்பரியமாக அலங்கரிக்க நினைப்பவர்கள் பித்தளை விளக்குகளையும் மண் விளக்குகளையும் தேர்ந்தெடுக்கலாம். நவீனமாக அலங்கரிக்க நினைப்பவர்கள் துருக்கிய மொசைக் விளக்குகளையும், மொராக்கோ பாணி விளக்குகளையும், உலோகக் கூண்டு விளக்குகளையும், அலங்கார மெழுகுவர்த்தி விளக்குகள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

வித்தியாசமான விளக்கு அலங்காரத்தை விரும்புபவர்கள் பண்ணை வீட்டுப் பாணியில் ‘பெல் ஜாரில் ’(bell jar) வடிவமைக்கப்பட்ட விளக்குகளைப் பயன்படுத்தி அலங்கரிக்கலாம். அப்படியில்லாவிட்டால் போஹிமியன் (bohemian) பாணி அலங்காரத்திலும் வடிவமைக்கலாம். உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால், இந்த விளக்குகளைப் பயன்படுத்திப் புதுமையான ஒரு விழாக்காலத் தோற்றத்தை வீட்டுக்குக் கொடுக்கலாம்.

அறைக்கலன்களும் முக்கியம்

விழாக்களின்போது அறைக்கலன்களின் தோற்றத்தையும் புதுப்பொலிவுடன் மாற்ற வேண்டியது அவசியம். முதலில், குஷனில் இருந்து தொடங்கலாம். ‘சில்க் குஷன்கள்’ வீட்டின் தோற்றத்தை உடனடியாக ஆடம்பரமாக மாற்றக் கூடியவை. பழைய மரப்பொருட்களுக்குப் பளபளப்பான வண்ணமடிப்பதன் மூலம் எளிமையாக மாற்றிவிடலாம். பித்தளை, செம்பு போன்ற பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அலங்கரிப்பதாலும் விழாக் காலத் தோற்றத்தைப் பெறலாம்.

SCROLL FOR NEXT