வீட்டுத் தேவைகள் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருவது. அந்த வளர்ச்சியை ஈடுசெய்யும் அளவுக்கு இட வசதி இல்லை. அதனால் அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் சென்னை போன்ற நகரங்களில் வந்தது. இது சென்னை மட்டுமல்லாது மற்ற நகரங்களுக்கும் பரவி வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஈரடுக்கு, மூன்றடுக்கு, நான்கடுக்கு என்றுதான் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுவந்தன. ஆனால் இன்று 10, 12ஐத் தாண்டிவிட்டன. அவ்வளவு உயரத்துக்குச் சென்றுவர மின் தூக்கியின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. வணிக வளாகங்கள் மட்டுமில்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் மின்தூக்கிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நகரத்தின் மின்தூக்கியில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அதன் வாசலில் எப்போதும் ஆள் இருக்கும் வகை. மற்றொன்று, ஆளே இல்லாது தானே இயங்கும் மின் தூக்கி. இந்த இரண்டாவது வகையைப் பயன்படுத்துவதில் சில எச்சரிக்கைகள் தேவை:
இந்தக் காலத்துச் சிறுவர்கள் மின்தூக்கியை ஒரு மேஜிக் அறை என்று எண்ணுவதில்லை. அதன் பயன் நன்றாகவே தெரியும். இருந்தாலும் மிகச் சிறு குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காக, அதை ஒரு விளையாட்டு சாதனமாக உபயோகிப்பது உண்டு. இது நல்லதல்ல.
வயதானவர்களுக்குத்தான் பெரும்பாலும் இது பயன்படுகிறது. எனவே இவர்களுக்குத் தோதாக, எப்போதும் எல்லா தளத்தின் மின்தூக்கி வாசலிலும் வெளிச்சம் மிக அவசியம்.
மின் தூக்கியில் பரவியிருக்கிற ஒளியை எப்போதும் அணைக்காதீர்கள்.
மின்தூக்கி ஒரு தளத்தில் முழுமையாக நிற்பதற்கு முன்னரே தாவாதீர்கள். முழுக்க நின்ற பின்னரே தரையில் காலை வையுங்கள். (இதற்கென்று சில மின் தூக்கிகளில் அம்புக் குறி வைத்திருப்பார்கள்)
மின் தூக்கியின் விசையை அமுக்கும்போது அவசரத்தில் கையை நீட்டாதீர்கள். வெளியே உங்களுக்குத் தெரிந்த நபர் இருந்தால், இவ்விதம் செய்வது இயல்பு. ஆனால் இது ரிஸ்க்.
மின்வெட்டு அல்லது வேறு ஏதேனும் காரணமாக நடுவில் மின்தூக்கி இயங்காவிட்டால், பதற்றமடையாதீர்கள். எச்சரிக்கை மணியை உபயோகியுங்கள். (இப்போது கைபேசியும் உள்ளது)
குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மேல் ஆட்கள் ஏற வேண்டாம். அதே போல் கனமான சாமான்கள் நிறைய வைக்க வேண்டாம். `பரவாயில்லை’ என்று நினைத்துச் செயல்பட்டால், இடையில் மின்தூக்கி நின்றுவிடுகிற அபாயம் உள்ளது.
மனிதர்களுக்கு ஓய்வு தேவைப்படுவது போல், மின்தூக்கிக்கும் சர்வீஸிங் தேவை. (மாதாமாதம், பொதுவாக தளங்களில் வந்து பழுது பார்ப்பார்கள். வராவிட்டால் குடியிருப்புச் சங்கம் மூலம் வலியுறுத்துங்கள்) அப்போது படிகளைப் பயன்படுத்துங்கள். பொதுவாகவே முதல் அல்லது இரண்டாவது தளத்தில் வசிப்பவர்கள், படிகளை அவ்வப்போது உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கும் நல்லது.
மனிதர்களுக்கு ஓய்வு தேவைப்படுவது போல், மின்தூக்கிக்கும் சர்வீஸிங் தேவை. (மாதாமாதம், பொதுவாக தளங்களில் வந்து பழுது பார்ப்பார்கள். வராவிட்டால் குடியிருப்புச் சங்கம் மூலம் வலியுறுத்துங்கள்) அப்போது படிகளைப் பயன்படுத்துங்கள். பொதுவாகவே முதல் அல்லது இரண்டாவது தளத்தில் வசிப்பவர்கள், படிகளை அவ்வப்போது உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கும் நல்லது.
அனைத்து மின் சாதனங்களும் நம் வசதிக்காகவே கண்டு பிடிக்கப் பட்டவைதான், நகரெமெங்கும் தளங்கள் பெருகிவருகிற இந்தக் காலகட்டத்தில் மின் தூக்கியின் முக்கியத்துவம் அதிகமாகிறது. எனவே அதற்கேற்ப எச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவை.