முதல் கட்டிடம் வசிப்பிடத்துக்காகக் கட்டப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். குகைகளில் வாழ்ந்துவந்த மனிதன் தன் ஆறாம் அறிவின் வளர்ச்சியால் கட்டிடங்கள் கட்டிக்கொண்டான். அதன் பிறகு கட்டிடங்கள் பல வகையான பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்டன; கட்டப்பட்டுவருகின்றன. வழிபடலுக்கான கோயில்கள், ஆட்சி மன்றங்கள், நூலகங்கள், அருங்காட்சியங்கள், வணிக வளாகங்கள் எனப் பலவகைப் பயன்பாட்டுக்காக இன்று கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கட்டிடங்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் வசிப்பிடங்களுக்கான பற்றாக்குறை உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் வீட்டுப் பற்றாக்குறை அதிக அளவில் இருக்கிறது. வீட்டுப் பற்றாக்குறையைப் போக்கும் விதத்தில் பல வகையான திட்டங்களால் மூலம் வீடுகள், அரசாலும் தனியார் குடியிருப்பு நிறுவனங்களாலும் கட்டப்பட்டு வருகின்றன.
உலகின் உலக அளவில் நகர வீட்டுப் பற்றாக்குறைதான் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. இந்த நகர வீட்டுத் தேவையைப் போக்கும் பொருட்டு தொகுப்பு வீடுகளாக, அடுக்குமாடிக் குடியிருப்புகள் உலகம் முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் சிறந்த வீட்டுக் குடியிருப்புகளுக்கான போட்டியை ஆர்க்கிடெக்ஸர் என்னும் இதழ் நடத்தியது. உலகம் முழுவதில் இருந்து 100 நாடுகளைச் சேர்ந்த 1500 கட்டிடங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. இந்தப் போட்டியில் தேர்வுபெற்ற உலகின் சிறந்த கட்டிடங்களின் பட்டியல் இது.
முதல் பரிசு அமெரிக்காவின் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடமான ஒன் மாடிசன். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 23வது தெருவில் உள்ளது இந்தக் கட்டிடம். 22 மாடிக் கட்டிடமாகக் கட்டப்பட்டுள்ள இது 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இதில் 91 சொகுசு வீடுகள் உள்ளன. அடுத்த இடத்தை துபாயில் உள்ள கயன் டவர் பிடித்துள்ளது. இந்தக் கட்டிடமும் 2013-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாகும். இது உலகின் மிக உயரமான ட்விஸ்ட் கட்டிடமாகும். அதாவது கம்பியை முறுக்கியதுபோல இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 1005 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடம் 73 மாடிகளைக் கொண்டது. இவை அல்லாமல் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
ஒன் மாடிசன் - அமெரிக்கா
ரனலாஹ் ஹவுஸ் - அயர்லாந்து
மெர்ஸிடீஸ் ஹவுஸ் - அமெரிக்கா
கயன் டவர் - துபாய்
லுனா - ஆஸ்திரேலியா
சாஃப்ட் ஹவுஸ் - ஜெர்மனி
கேபின் அட் நோர்டஹவ் - நார்வே
மிலனோஃபியோரி - இத்தாலி