உலகிலேயே முதன்முறையாக இங்கிலாந்தில் 1820-ம் ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதன் மூலம் பயணங்கள் எளிதாயின.
ரயில் போக்குவரத்துக்குப் பிரம்மாண்டமான நிலையங்கள் தேவைப்பட்டன.
ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை இங்கிலாந்தே முன்னோடி. இந்தியாவில் இங்கிலாந்து ஆட்சி நடைபெற்றபோது தங்கள் நிர்வாகத் தேவைக்காக இந்தியா முழுவதையும் ரயில் போக்குவரத்தால் இணைத்தது அந்த அரசு.
இம்மாதிரி சில நன்மைகள் இங்கிலாந்து ஆட்சியால் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கின்றன.
ரயில் போக்குவரத்துக்காக சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் பிரம்மாண்டமான ரயில் நிலையங்கள் கட்டப்பட்டன. சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற கட்டிடங்கள் அவற்றுள் சில. இதுபோன்று மும்பையில் கட்டப்பட்டதுதான் விக்டோரியா ரயில் நிலையம்.
சத்ரபதி சிவாஜி நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்ட இந்த ரயில் நிலையம்தான் உலகின் மிக அழகான ரயில் நிலையம் எனப் பெயர் பெற்றிருக்கிறது. இதுபோன்று உலகின் அழகான ரயில் நிலையங்களைப் பட்டியலிட்டிருக்கிறது கட்டிடக் கலை தொடர்பான இணைய இதழ் ஒன்று.
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் 1887-ம் ஆண்டு திறக்கப்பட்டது. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக யுனெஸ்கோ இதைத் தேர்ந்தெடுத்துள்ளது. ப்ரடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்னும் இங்கிலாந்துக் கட்டிடக் கலைஞர் இதை வடிவமைத்துள்ளார்.
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் வகிப்பது, பெல்ஜியத்தின் லீஜ்-கில்லிமின்ஸ் ரயில் நிலையம். பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய நகரான லீஜ்ஜில் இருக்கும் இந்த ரயில் நிலையத்தைத் தினமும் சராசரியாக
15 ஆயிரம் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
1842-ம் ஆண்டு இந்த ரயில் கட்டப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு 1882, 1905 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.
இறுதியாக 2009-ம் ஆண்டு மீண்டு திரும்பக் கட்டுள்ளது. இந்த ரயில் நிலையம்தான் இந்தப் பட்டியலில் உள்ள ஒரே நவீன ரயில் நிலையமாகும்.
மூன்றாவது இடத்தில் செயிண்ட் பான்கிரஸ் ரயில் நிலையம் இடம் பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையம் 1868-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இவை மட்டுமல்லாது மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தின் ரயில் நிலையம், அமெரிக்காவின் கிராண்ட் செண்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.