சொந்த வீடு

உலகின் கனமான கட்டிடம்

செய்திப்பிரிவு

கின்னஸ் அமைப்பு உலகின் பல்வேறு சாதனைகளைப் படியலிட்டு வருகிறது. அதுபோல கட்டிடவியல் துறையின் சாதனைகளையும் பட்டியலிட்டுள்ளது. உலகின் மிக உயரமான கட்டிடத்தையும், உலகின் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பையும், பட்டியலிட்டுள்ளது.

உலகின் உயரமான கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ்கலீபா. இதை விஞ்சும் அளவுக்குக் கட்டிடங்கள் சவுதி அரேபியாவில் கட்டப்பட்டுவருகிறது. உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பு என்னும் சாதனையையும் துபாய் நகரமே தட்டிச் சென்றுள்ளது. துபாயில் உள்ள பிரின்ஸ் டவர் கட்டிடம்தான் உலகின் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம்.

இந்த வரிசையில் இப்போது உலகின் கனமான கட்டிடம் என்னும் புதிய சாதனையை ஒரு கட்டிடம் தட்டிச் சென்றுள்ளது. ருமேனியா தலைநகரில் உள்ள நாடாளுமன்ற மாளிகைக் கட்டிடம்தான் அது. அமெரிக்காவின் பெண்டகன் கட்டிடத்துக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய நிர்வாகக் கட்டிடம் என்ற பெருமையும் உலகின் அதிகப் பொருள் செலவில் கட்டப்பட்ட பொது நிர்வாகக் கட்டிடம் என்ற தனிப் பெருமையும் இதற்குண்டு. உலகின் மிகப் பெரிய நாடாளுமன்றக் கட்டிடமும் இதுவே.

இத்தனை பெருமைகள் கொண்ட கட்டிடத்துக்கு மேலும் ஒரு பெருமை சேர்ப்பதுதான், இந்தக் கின்னஸ் அங்கீகாரம். 1997-ம் ஆண்டு இந்தக் கட்டிடம் பொதுப்பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு லட்சம் டன் இரும்பும் வெண்கலமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு மில்லியன் கன மீட்டர் மார்பிள் கற்களும் இந்தக் கட்டிடத்தில் பதிபிக்கப்பட்டுள்ளது. 3,500 டன் கிரிஸ்டல் கிளாசும், 9 லட்சம் கன மீட்டர் மரமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. 12 மாடிக் கட்டமான இதில் 1100 அறைகள் மொத்தம் உள்ளன.

ருமேனியா நாட்டின் அதிபர் நிகோலே சீயசெச்குவால் 1978-ம் ஆண்டு இந்தக் கட்டிடப் பணி தொடங்கப்பட்டது. ருமேனியா மீது எதிரி நாடுகள் போர் தொடுக்கக்கூடும். அப்படித் தொடுக்கும்பட்சத்தில் அணுகுண்டு வீசப்பட்டால் அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு கனமான சுவர்கள் எழுப்பப்பட்டதாலேயே இந்தக் கட்டிடம் உலகின் கனமான கட்டிடமாகத் திகழ்கிறது. இந்தக் கட்டிடத்தின் சுவர்கள் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பாடத தன்மைகொண்டவை.

SCROLL FOR NEXT