பி.வி.தோஷி, 1927-ம் ஆண்டு மும்பைக்கு அருகில் உள்ள புனேயில் பிறந்தவர். பம்பாயில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். படித்து முடித்ததும் பிரான்ஸ் நாட்டில் உலகப் புகழ்பெற்ற கட்டிடவியல் அறிஞர் லா கர்பூஸரின் கீழ் பணியாற்றினார். 1954-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்தியக் கட்டிடத் துறைக்குப் பெரும் பங்களிப்பை நல்கியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குறைந்த வருமானத்தினருக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். ஆரண்யா ஹவுஸ்சிங் என அழைக்கப்படும் இந்த வீட்டுக் குடியிருப்புத் திட்டம் ஒரு முன்மாதிரித் திட்டம்.
இது மட்டுமல்லாது நேஷனல் இன்ஸ்டியூடட் ஆஃப் ஃபேஷன், டெல்லி கட்டிடம், நேஷனல் இன்ஸ்டியூடட் ஆஃப் மேனேஜ்மெண்ட், பெங்களூரூ கட்டிடம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனக் கட்டிடங்களும் கட்டியுள்ளார். ராயல் இன்ஸ்டியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆகிடெக்ஸரால் கவுரவிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் வழங்கப்படும் கட்டிடத் துறைக்கான உயரிய விருதான பிரிட்ஸகர் விருதைப் பெற்றுள்ளார்.
பதேபூர் சிக்ரி, மதுரை, ரங்கம், ஜெய்பூர் போன்ற இந்தியாவின் பழமையான நகரங்களுக்குச் செனு அங்குள்ள பாரம்பரியக் கட்டிடங்களைக் கண்டு அதன் நுட்பங்களை பிரித்தறிந்து பயின்றுள்ளார். 22 முதல் 88 வயதுவரையுள்ள கட்டிட வல்லுநர்களைச் சேர்த்து சுற்றுச்சூழலுக்கேற்ற கட்டிடக் கலைக்காக வாஸ்து சில்பா என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளார். ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர் என்னும் கட்டிடக் கலைக்கான கல்லூரியை அகமதாபாத்தில் தொடங்கி நடத்தி வருகிறார். மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் கட்டிடவியல் அறிஞராக நடித்துள்ளார்.