'ஸ்மார்ட் சிட்டி’யாக மாறப்போகும் இந்தியாவின் முதல் இருபது நகரங்களின் பெயர்கள் இரண்டு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. இந்த இருபது நகரங்களும் நிதி கிடைக்கப் பெற்றவுடன் விரைவில் ஸ்மார்ட் சிட்டியாக மாறவிருக்கின்றன. அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் நாற்பது நகரங்கள் இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் இணையவிருக்கின்றன.
நகரமயமாக்கம்
உலகம் முழுவதும், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகச் சில மாதிரி ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இன்னும் முப்பது ஆண்டுகளில் எழுபது சதவீத மக்கள் நகரங்களில் குடிபெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், இந்தியாவும் விதிவிலக்கில்லை. இந்தியாவில் இந்த இடப்பெயர்வைச் சமாளிக்க எப்படியும் ஐந்நூறு நகரங்கள் தேவை என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, நகரமயமாக்கம் என்பது பிராந்தியங்களின் திட்டமிடல் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த நகரமயமாக்கம் தவிர்க்க முடியாததாகப் பார்க்கப்படுகிறது. இதற்காகச் செலவிடப்படும் தொகையைவிட அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகமாக இருந்தால்தான் வேகமான வளர்ச்சியை அடைவது சாத்தியமாகும்.
நகரமயமாக்கம் அதிகரிப்பதால், நகர வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும்படி நகரங்களை உருவாக்குவதன் தேவை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில்தான், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது.
எது ‘ஸ்மார்ட் சிட்டி’?
ஒரு ‘ஸ்மார்ட் சிட்டி’ என்பது அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், நிலைத்தன்மையுடன் இயங்கக்கூடிய ரியல் எஸ்டேட், தகவல் தொடர்பு, நம்பகத்தன்மை கொண்ட சந்தை போன்றவற்றுடன் அமைந்திருக்கும் நகரப்பகுதி. இந்த நகரத்தில் தகவல் தொழில்நுட்பம்தான் முதன்மையான உள்கட்டமைப்பு வசதியாக இருக்கும். இது நகரவாசிகளுக்குத் தேவையான அடிப்படை சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை கொடுத்து செயல்படும். இதில் தானியங்கி உணர்திறன் கொண்ட வலையமைப்புகள், தகவல் மையங்களும் அடங்கும். இதெல்லாம் இப்போது நடைமுறையில் வழக்கத்தில் இல்லாவிட்டாலும், ஒரு ஸ்மார்ட் சிட்டியில் இந்த அம்சங்கள் வருங்காலத்தில் இடம்பெறப்போகின்றன.
அத்துடன், ஸ்மார்ட் சிட்டியின் உள்கட்டமைப்பு வசதிகளில் இடம்பெறப்போகும் அம்சங்களாக அரசு சில அடிப்படை வசதிகளை அறிவித்திருக்கிறது.
போதுமான தண்ணீர் விநியோகம், மின்சார விநியோகம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சுகாதார வசதிகள், திறமையான நகர்ப்புற இயக்கம் மற்றும் பொது போக்குவரத்து, ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மலிவான வீடுகள், வலிமையான தகவல் தொழில்நுட்ப இணைப்பு வசதி, சீரிய நிர்வாகம், குறிப்பாக மின்னாளுகை வசதி, மக்கள் பங்கேற்பு, நிலைதன்மையுடன்கூடிய சுற்றுச்சூழல், மக்களின் பாதுகாப்பு, குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுதல், சுகாதார மற்றும் கல்வி வசதி போன்ற அம்சங்கள் அரசின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
ஒரு ‘ஸ்மார்ட் சிட்டி’ பொருளாதார வளர்ச்சியை நிலைத்தன்மையுடன் பெறும்படி வெற்றிகரமான சந்தைகளையும் கொண்டிருக்கும். இதனால் மக்கள், தொழில்துறை, அரசு, சுற்றுச்சூழல் என எல்லோரும் பயனடைவார்கள்.
எப்படித் தொடங்கியது?
உலகம் பொருளாதாரம் படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருந்தபோதுதான் முதன்முதலில் இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ கருத்து உருவானது. 2008-ல், ஐபிஎம் நிறுவனம் முதன்முதலாக ‘ஸ்மார்ட் சிட்டி’ உருவாக்கத்தை அதனுடைய ‘ஸ்மார்ட்டர் பிளானட் இனிசியேட்டிவ்’ திட்டத்தின் மூலம் தொடங்கியது. அதற்குப் பிறகே, இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ கருத்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அதிகளவில் முதலீடுசெய்யத் தொடங்கியிருக்கின்றன.
இந்திய நகரங்கள்
இந்தியாவின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்காக 98 பெரு நகரங்களும், சிறு நகரங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இருபத்தி நான்கு தலைநகரங்கள், இருபத்தி நான்கு தொழில்துறை இடங்கள், பதினெட்டு கலாசாரம் மற்றும் சுற்றுலா சிறப்பு வாய்ந்த இடங்கள், ஐந்து துறைமுக நகரங்கள், மூன்று கல்வி, உடல்நலப் பராமரிப்புக்கு ஏற்ற நகரங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் இருபது நகரங்களின் பெயர்கள் முதல் அறிவிப்பில் வெளியாகியிருக்கின்றன. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து சென்னையும், கோவையும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தனியார் முதலீடுகள், வெளிநாட்டு முதலீடுகள் போன்றவை அதிக அளவில் தேவைப்படுகின்றன.
இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை நிறைவேற்றுவதில் பல சவால்களும் இருக்கவே செய்கின்றன. இந்தத் திட்டம் வெற்றிபெறுவதற்குக் குடியிருப்போர், தொழில்முனை வோர்கள், அரசு எனப் பலமுனை ஆற்றல் தேவைப்படுகிறது. அத்துடன், இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கான காலஅவகாசமும் அதிகம். ஒரு முழுமையான ‘ஸ்மார்ட் சிட்டி’ உருவாகுவதற்கு எப்படியும் இருபது ஆண்டுகளில் இருந்து முப்பது ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.