இந்திய மக்கள்தொகை 121 கோடி. இதில் சுமார் 37.7 கோடிப் பேர் நகரத்தில்தான் வசிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்திய நகரங்களில் வசிப்போரின் எண்ணிக்கை 2031-ம் ஆண்டில் அறுபது கோடியைத் தொட்டுவிடும் என்கிறார்கள். 2015 ம் ஆண்டு தொடங்கி 2031-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த நகரமயமாதல் சதவீதம் ஆண்டுக்கு 2.1 என்னும் அளவில் அதிகரிக்கும் என்கிறார்கள். இது சீனாவின் நகரமயமாதல் சதவீதத்தைவிட இரு மடங்கு அதிகம்.
இப்படி நகரத்தில் ஒட்டுமொத்தமாக மக்கள் குழுமும்போது சில நகரங்கள் மட்டுமே அதன் குடிமக்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்கும் வகையில் உள்ளன. பெரும்பாலான நகரங்களில் குடியிருப்பு சார்ந்தும் உள்கட்டமைப்பு சார்ந்தும் பெருமளவிலான சிக்கல்களே ஏற்படுகின்றன. இதனால் ஒழுங்கற்ற நகரமயமாதல் என்னும் போக்கு இந்தியாவில் உருவாகியுள்ளது. இப்படியான ஒழுங்கற்ற நகரமயமாதலால் நகரங்களின் குடிசைப் பகுதிகளிலும் நடைமேடைகளிலும் வாழும் கோடிக்கணக்கானோரின் வாழ்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மறைமுக நகரமயமாதல்
உலக வங்கியின் புள்ளிவிவரம் ஒன்றின் படி, உலகத்தின் நகர்ப் பகுதிகளில் வாழ்வோரில் 55.3 சதவீதமானோர் இந்தியாவின் நகரங்களில் வசிக்கிறார்கள். ஆனால் இந்த சதவீதம் 31க்கும் சற்று அதிகம் என்றுதான் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைவெளியைக் கூர்ந்து நோக்கினால் பொருட்படுத்தத்தக்க அளவில் மறைமுக நகரமயமாதல் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
நகரங்களின் சுற்றுப்பகுதிகளில் தான் இப்படியான மறைமுக நகரமயமாதல் என்னும் சூழல் சாத்தியமாகிறது. பெரும்பாலும் அதிகாரபூர்வ பதிவேடுகளில் இப்படிக் குடியேறியவர்கள் பதிவாவதில்லை. உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், நிலம், குடியிருப்புகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நகர மக்கள்தொகை உருவாக்கும் அழுத்தம் காரணமாக மக்கள் புறநகர்ப் பகுதிகளில் குடியேறுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், நாட்டின் நகர உள்கட்டமைப்பில் குறிப்பாகக் குடியிருப்பு விஷயத்தில் இருக்கக்கூடிய இடைவெளியை நிரப்புவது என்பது மிகவும் சிக்கலான காரியம். இந்தியப் பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் கூற்றின்படி, வீடில்லா துயரத்தால் பாதிக்கப்படுவோரில் 95.6 சதவீதத்தினர் பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ளோரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வோருமே. மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு தரும் இவ்வளவு பேருக்குத் தேவையான வீட்டு வசதிகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.
நகரமயமாதல் வளர்ச்சியடைந்துகொண்டே வருகிறது. ஆனால் இந்தியாவில் வீடுகளின் பற்றாக்குறையோ 1.878 கோடியைத் தொட்டுள்ளது. நகரத்தில் வசிக்கும் சுமார் 56 சதவீத இந்தியக் குடும்பங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு அல்லது அதற்கும் குறைவுதான் என்கிறது புள்ளிவிவரம் ஒன்று. இது கடந்த பத்தாண்டுகளில் இந்திய வீட்டு வசதித் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம். சிறிய குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நகரப் பகுதிகளில் வீடுகளின் தேவையும் அதிகரித்துள்ளது. 2001, 2011 ஆகிய ஆண்டுகளுக்கிடையே இந்தியக் குடும்பங்களின் எண்ணிக்கை 6 கோடி அதிகரித்திருக்கிறது, இதே காலகட்டத்தில் இந்திய வீடுகளின் எண்ணிக்கையோ 8.1 கோடி அதிகரித்திருக்கிறது.
இந்தச் சூழலில், சமீபமாக வெளியிடப்பட்டிருக்கும் அதிகாரபூர்வ பொருளாதார ஆய்வு ஒன்று, இந்தியாவில் சுமார் 2 கோடி வீடுகள் பற்றாக்குறையாக உள்ளன என்று கூறியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக, பெரும்பாலான கட்டுநர்கள் நடுத்தரவர்க்கத்தினர். செல்வந்தர்கள் ஆகியோருக்கான வீடுகளைக் கட்டுவதில் மட்டுமே முனைப்பு காட்டினார்கள்; வீடுகளின் விலையும் சாமானியர்கள் தொடக்கூடிய உயரத்திலில்லை.
எதிர்கொள்ளும் சவால்கள்
குறைந்த விலை வீடுகள், மலிவு விலை வீடுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அவற்றை உருவாக்குவதற்குத் தேவையான நிலப் பற்றாக்குறை, நியாயமான வட்டியில் கிடைக்கும் கடன், அதிகரிக்கும் நகரமயமாக்கம், அதிகரிக்கும் நடுத்தரவர்க்கம் உள்ளிட்ட வீடுகளின் தேவையை முடுக்கிவிடும் அம்சங்கள் ஆகியவை சவால்களாக உள்ளன. அதே நேரத்தில், ரியல் எஸ்டேட்டில் கட்டுநர்களோ ஆடம்பரமான, அதிக விலையுள்ள, உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடுகளை உருவாக்குவதையே பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் இத்தகைய குடியிருப்புத் திட்டங்களில் அதிக வருமானம் கிடைக்கும் என்று கட்டுநர்கள் நினைக்கிறார்கள்.
மேலும், குடியிருப்புத் திட்டங்களை நிறைவேற்றி முடிக்க ஆகும் காலம், முதலீடு, அதிகரித்துக்கொண்டே இருக்கும் காலி மனைகளின் விலை, கட்டுமானச் செலவு, அதிகக் கட்டணம், வரி போன்ற கட்டுமான விவகாரங்களும், அதே போல அனுகூலமற்ற கட்டுமான விதிமுறைகள் போன்றவையும் இந்தியாவில் தேவையான வீடுகளை உருவாக்கவிடாமல் முட்டுக்கட்டை போடுகின்றன.
முன்னே விரியும் பாதை
நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் மத்திய அரசு, நாட்டின் வீட்டு வசதித் தேவையின் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டுள்ளது. நகரப் பகுதிகளில் வீட்டு வசதி தொடர்பான விவகாரங்களை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியே ஸ்மார்ட் சிட்டி திட்டம். கட்டுப்படியாகும் விலையுள்ள வீடுகள் தொடர்பான சிக்கல்களைப் பொறுத்தவரை, நிலம் மற்றும் வீட்டு வசதி கொள்கை சீர்திருத்தம் நகரப் பகுதிகளை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பிரதிநிதித்துவம், புதுமையான வழிகளில் கிடைக்கும் வீட்டு வசதிக்கான நிதியுதவி, கட்டுமானச் செலவு குறைப்பு, வரம்புமீறும் செலவுகளைப் பட்டியலிடுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவதே தீர்வாகும் என்கிறார்கள்.
மேலும், திட்டமிடப்பட்ட நகரமயமாக்கம் போன்ற ஆக்கபூர்வ முயற்சிகளே நகரங்களிலும் பெரு நகரங்களிலும் குடிசைப் பகுதிகள் உருவாவதைத் தடுக்கும்; வேலைவாய்ப்புகளை வழங்கும்; வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களுக்கும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை வழங்கும். இது நிகழ்ந்தால் நல்லது. ஆனால் எப்போது நிகழும்?