சொந்த வீடு

பொருள் புதிது: விநோத விளக்கு

செய்திப்பிரிவு

விளக்குகள் முன்பெல்லாம் வீட்டுக்குள் ஒளி ஏற்ற மட்டும் பயன்பட்டு வந்தன. இப்போது விளக்குகள் வீட்டுக்கு அழகைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காகவும் பயன்படுகின்றன. அதனால் விளக்குகளில் இன்று பலவகை வந்துவிட்டன. தொங்கும் விளக்குகள், பூச்சர விளக்குகள், பந்து வடிவ விளக்குகள், சுவர் விளக்குகள், மாய விளக்குகள் எனப் பல வகை விளக்குகள் இன்று சந்தையில் கிடைக்கின்றன.

இதில் பந்து வடிவ விளக்குகள் சீனா மற்றும் ஜப்பான் கலாச்சாரத்தின் பின்னணியில் இருந்து வந்தவை. இந்தப் பந்து வடிவ விளக்குகளைத் தயாரித்து வரும் யமஜிவா என்னும் ஜப்பான் விளக்கு தயாரிப்பு நிறுவனம் புதிய விளக்கு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வடிவ விளக்கு ஏற்கனவே 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மயகுனா ரக விளக்குகளை ஒத்த உருளை வடிவம் கொண்டது. இந்தப் புதிய விளக்குக்கு ‘மயுகுனா ம’ எனப் பெயரிடப் பட்டுள்ளது. ‘ம’ என்றால் ஜப்பானிய மொழியில் உண்மை, நேர்மை என்று அர்த்தம்.

புகழ்பெற்ற வடிவமைப்பாளர் டோயோ இதோ இதை உருவாக்கியுள்ளார். ஃபைபர் பொருளை வலை போலச் சுற்றி இந்த விளக்கை வடிவமைத்துள்ளனர். இந்த ஃபைபர் கரிய நிறத்தால் ஆனது. ஜப்பானிய பாரம்பரிய மையான சுமியின் நிறத்தை நினைவூட்டும் வகையில் இந்தக் கறுப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வலைப்பின்னல் மூன்று சுற்றுகள் சுற்றப்பட்டுள்ளது. நடுவில் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. விளக்கு ஏற்றும்போது இந்த வலைப் பின்னல் களுக்கு இடையில் பட்டு நிழல் ஓவியமாகத் தெரியும். இது வீட்டுக்கு விநோதமான அழகைத் தரும்.

தொகுப்பு: ஜே.கே.

SCROLL FOR NEXT