வட இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக தென் பகுதியில் கேரள சுவர் ஓவியங்கள் (Kerala mural painting) பிரபலமானவை. இந்தக் கலை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் தோன்றியது. இந்தியப் புராணக் கதைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டன.
வட இந்தியச் சுவர் ஒவியங்களைப் போல் இவை பொதுமக்கள் வீடுகளில் வரையப்படவில்லை. இன்றைக்கு இந்த ஓவியங்களைப் பலரும் தங்கள் வீடுகளில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கோயில்களிலும் அரண்மனைகளிலும் மட்டுமே வரையப்பட்டன.
பழமையான கேரள சுவர் ஓவியம் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகில் உள்ள திருநந்திக்கரை குகைக் கோயிலில் உள்ளது. பெரும்பாலான சுவர் ஓவியங்கள் 9-ம் நூற்றாண்டுக்கும் 12-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில்தான் வரையப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கொச்சியில் உள்ள மட்டஞ்சேரி அரண்மனையிலும் திருசூரில் உள்ள வடக்கும்நாதன் கோயிலிலும் பழமையான கேரள சுவர் ஓவியங்கள் காணப்படுகின்றன.
கேரள சுவர் ஓவியங்கள் வண்ணமய மானவை. சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, வெளிர் மஞ்சள், வெளிர் சிகப்பு எனப் பல விதமான வண்ணங்களை கேரள சுவர் ஓவியங்களில் பார்க்க முடியும். ஆனால் அதிகமாக அந்தியைப் போன்ற பொன் மஞ்சள் வண்ணம்தான் கேரள ஓவியத்தில் பிரதானம்.
இந்த வண்ணங்கள் எல்லாம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்றன. பூக்களிலில் இருந்தும் தாவர எண்ணெயிலிருந்தும் இந்த வண்ணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
களமெழுத்து என்னும் கோல வடிவம்
களமெழுத்து என்னும் சடங்கு வடிவத்திலிருந்து கேரள சுவர் ஓவியம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. களமெழுத்து என்பது தெய்வ உருவங்களைக் கோலமாக இடும் முறை. மேலும் பல்லவக் கலை வடிவத்தையும் கேரள சுவர் ஓவியங்கள் உள்வாங்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. சோழர் காலத்து ஓவியங்களுடன் இந்த சுவர் ஓவியங்களுக்கு உறவு இருப்பதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
களமெழுத்து என்னும் சடங்கு வடிவத்திலிருந்து கேரள சுவர் ஓவியம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. களமெழுத்து என்பது தெய்வ உருவங்களைக் கோலமாக இடும் முறை. மேலும் பல்லவக் கலை வடிவத்தையும் கேரள சுவர் ஓவியங்கள் உள்வாங்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. சோழர் காலத்து ஓவியங்களுடன் இந்த சுவர் ஓவியங்களுக்கு உறவு இருப்பதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
இன்று கேரள சுவர் ஓவியம் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. கேரளாவின் பல கல்லூரிகளில் கேரள சுவர் ஓவியம் பாடமாக நடத்தப்படுகிறது. அங்கு கல்வி கற்று வெளியே வரும் மாணவர்களால் இந்தக் கலை இப்போது புத்துணர்வு பெற்றுள்ளது. சுவர் ஓவியமாக மட்டுமின்றி கேன்வாஸிலும் வரைகிறார்கள்.
கோயில்களிலும் அரண்மனைகளிலும் மட்டும் அழகு சேர்ந்த இந்தச் சுவர் ஓவியங்கள் எல்லாத் தரப்பினர்களின் வீடுகளிலும் இப்போது அழகு சேர்க்கின்றன.