சொந்த வீடு

குப்பைகளைக் குறைக்க ஒரு வழி

என்.கெளரி

சென்னையில் ‘கபாடிவாலா கனெக்ட்’ (Kabadiwalla Connect) என்னும் நிறுவனம் கழிவுகள் மேலாண்மை மற்றும் மறுசுழற்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், இந்நிறுவனம் நகரில் குப்பைகளைச் சேகரித்து மறுசுழற்சி செய்பவர்களையும், பொதுமக்களையும் இணைக்கும் தகவல் சேவைப் பணியையும் செய்துவருகிறது.

சித்தார்த் ஹண்டே என்னும் இளைஞர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு ‘கபாடிவாலா கனெக்ட்’டை ஒரு சமூக நிறுவனமாகத் தொடங்கியிருக்கிறார். தற்போது, இந்நிறுவனம் மக்களுக்குக் கழிவுகள் மேலாண்மை பற்றிய சரியான புரிதல் ஏற்படுத்துவதற்காக ‘தினசரி மறுசுழற்சியாளர்கள்’(Everyday Recyclers) என்ற பெயரில் பிரச்சாரத்தையும் தொடங்கியிருக்கிறது.

சித்தார்த், கல்லூரியில் படிக்கும்போதே சென்னைக் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு, கழிவுகள் மேலாண்மை குறித்து சிந்திப்பதிலும், அதைப் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதிலும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார். இதற்கு அவருடைய டேட்டா அனலிஸ்ட் படிப்பும் உதவிசெய்திருக்கிறது. “இந்தியாவில் ஓர் ஆண்டில் மட்டும் 7 கோடி டன் கழிவுகள் உற்பத்தியாகிறது. அவற்றில் 90 சதவீதம் நிலப்பகுதியை ஆக்கிரமிக்கிறது. சென்னையில் மட்டும் ஒரேநாளில் 5,000 மெட்ரிக் டன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் இருபது சதவீதத்தை மறுசுழற்சி செய்யமுடியும். இதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அப்படி உருவானதுதான் கபாடிவாலா கனெக்ட்” என்கிறார் சித்தார்த்.

பழைய பொருட்களைச் சேகரிப்பவர்களை இந்தியில் ‘கபாடிவாலா’ என்று அழைப்பார்கள். அதனால், தங்கள் நிறுவனத்துக்கு சித்தார்த்தும், அவருடைய நண்பர்களும் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். இதுவரை, சென்னையில் பழைய பொருட்கள், பேப்பர் கடை நடத்தும் 600 மேற்பட்டோரைத் தங்கள் நிறுவனத்துடன் இணைத்திருக்கிறார்கள் இவர்கள். “நாங்கள் இதை ஒரு சமூக நிறுவனமாக முன்னெடுத்துச் செல்கிறோம். வீட்டின் கழிவுகளை எப்படிப் பிரிப்பது, உரம் எப்படித் தயாரிப்பது போன்ற தகவல்களை எங்கள் நிறுவனம் மூலம் மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். அத்துடன், கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு அவர்கள் பகுதியில் இருக்கும் பழைய பொருட்கள் சேகரிப்பவர்களுடன் இணைக்கிறோம்” என்கிறார் சித்தார்த்.

இவர்கள் நடத்தும் ‘தினசரி மறுசுழற்சியாளர்கள்’(Everyday Recyclers) பிரச்சாரத்துக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. “இப்போதைக்கு, மாதத்தில் இரண்டுமுறை மறுசுழற்சி பற்றிய விவாதங்களை ஒருங்கிணைக்கிறோம். மக்களின் பங்களிப்பைப் பொறுத்து, இந்த விவாதங்களை ஒவ்வொரு வாரமும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் சித்தார்த். இந்தக் கூட்டங்களில் பேசுவதற்கு அந்தந்த பகுதியில் கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் பகுதிவாசிகளையே இவர்கள் அழைக்கின்றனர்.

இது தவிர, தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில், ‪#‎SegregationChallenge‬ என்னும் வீடுகளில் கழிவுகளைப் பிரிக்கும் சவாலையும் தொடங்கியிருக்கின்றனர். இந்த சவாலை ஏற்றுப் பல இளைஞர்களும் தங்கள் வீடுகளில், சமையல் கழிவுகள், மறுசுழற்சி செய்யத் தகுந்த கழிவுகள் (காகிதம், உலோகம், பிளாஸ்டிக், கண்ணாடி), ஆபத்தான கழிவுகள் என மூன்று தனித்தனி குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கின்றனர். அவர்களுடைய ‘Everyday Recyclers’ பேஸ்புக் பக்கத்தில் இந்த மாதிரி பல சவால் வீடியோக்களைப் பார்க்க முடிகிறது.

இந்நிறுவனத்தின் ‘அப்சைக்கிள்’ என்னும் திட்டத்தின் மூலம், மறுசுழற்சி செய்த பொருட்களை வைத்துப் புதுமையான பொருட்களை உருவாக்கி அதை விற்பனை செய்கின்றனர். இந்தத் திட்டமும் பலருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு: >http://www.kabadiwallaconnect.in/

பேஸ்புக்கில் பின்தொடர: >https://www.facebook.com/KabadiwallaConnectProject/?fref=ts

சித்தார்த் ஹண்டே

SCROLL FOR NEXT