உலகிலேயே உயரமான கட்டிடம் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் செங்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் த கிங்டம் டவர் என்பதே. இந்தக் கட்டிடத்தில் வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடத்தின் உயரமே இதற்குப் பெருமை சேர்க்கிறது. இது போதாதென்று இதற்கு மற்றொரு பெருமையும் சேரப்போகிறது. உலகிலேயே உயர்ந்து நின்றால் போதுமா உயரத்தையும் விரைவாக எட்ட வேண்டும் என்ற ஆசை வருமல்லவா? அதுதான் அடுத்த பெருமை. இங்கு அமையவிருக்கும் லிஃப்ட் உலகின் மிக வேகமானது என்கிறார்கள். இது வினாடிக்கு 32 அடி 10 மீட்டர் - உயரம் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த லிஃப்ட் ஃபின்லாந்து நாட்டில் தயாராகிறது. மின் தூக்கிகள் தயாரிப்பில் பிரசித்தி பெற்றுள்ள கோன் நிறுவனம் இந்த லிப்டை உருவாக்கிவருகிறது. சுமார் 660 மீட்டர் உயரத்திற்கு மேல் பயணிக்கப் போகிறது இது. அல்ட்ரா ரோப் தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் உயர் தொழில்நுட்ப கார்பன் கேபிள் இந்த லிஃப்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உயரத்தை நோக்கி லிப்ட் விரைவாகச் சென்றாலும் அதில் பயணிக்கும் நபர்களுக்கு எந்த விதப் பயமும், காதடைப்பது போன்ற உணர்வும் ஏற்படாமல் பயணம் இதமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வோம் என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் கோன் நிறுவனத்தினர். இந்த லிப்டில் பயன்படும் கேபிள்களை ஆய்வகத்தில் நன்கு சோதனை செய்த பின்னரே பயன்படுத்தியுள்ளனர். எடை குறைந்த ஆனால் உறுதியான இந்த உயர் தொழில்நுட்ப கேபிள்கள் லிப்டின் இனிமையான பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள் இன்ஜினீயர்கள். இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 65 லிஃப்ட்கள் அமைய உள்ளன. இதில் ஏழு லிப்ட்கள் இரண்டு அடுக்குகளைக் கொண்டவை.
இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தக் கட்டிடம் 2018-ல் கட்டிமுடிக்கப்படும் என்று தெரிகிறது.